வேள்விப் படலம்

வேள்விப் படலம்

bookmark

பாலகாண்டம்

பாலகாண்டம் என்பது இராமாயணத்தின் முதல் காண்டமாகும். பால என்பது தோற்ற வரலாற்றைக் குறிக்கிறது. இராமபிரானின் இளம்பருவ வாழ்க்கையை விவரிப்பதால் இது பாலகாண்டம் எனப் பெயர் பெற்றது. பாலகாண்டம் மொத்தம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டுள்ளது.

வேள்விப் படலம்

(விசுவாமித்திரர் தனது வேள்வியைச் செய்து முடித்ததைக் கூறும் பகுதியாகும். தேவர்கள் கூறியபடி இராமனுக்கு விசுவாமித்திரன் படைக்கலம் தருவதும். அப்படைக் கலன்கள் இளையவனைப் போலப் பணிபுரிவோம் என முன்வருதலும் பிறகு மூவரும் வேள்வி செய்வதற்குரிய இடம் நாடிச் சேர்தலும் முனிவன் வேள்வியைத் தொடங்குவதும் அரக்கர் வருகையும் முனிவர்கள் ராமனைச் சரண் அடைய - அவர்களைக் கலங்க வேண்டா என்று கூறி இராமன் அரக்கரை அழித்தலும் சுபாகுவைக் கொன்று. மாரீசனைக் கடலில் சேர்த்தும். விசவாமித்திரன் இராமனைப் பாராட்டுதலும் சனகன் வேள்வியைக் காண மூவரும் மிதிலை நோக்கிச் செல்லத் தொடங்குதலும் வேள்விப் படலத்துள் கூறப்படும் நிகழ்ச்சிகளாகும்.)

தேவர்களின் விருப்பப் படியே தன்னிடம் இருந்த அனைத்து திவ்விய அஸ்த்திரங்களையும் அந்த தசரத குமாரர்கள் இருவரிடத்திலும் மகிழ்ச்சியுடன் கொடுத்தார் விசுவாமித்திரர் . அவற்றைப் பெற்றுக் கொண்ட அந்த இணை பிரியா சகோதரர்கள் விசுவாமித்திரரை வணங்கி ஆசி பெற்றார்கள்.

பின்னர் விசுவாமித்திரர் அஸ்திர மந்திரங்கள் அனைத்தையும் ஸ்ரீ ராமருக்கு உபதேசித்து, அஸ்திர தேவதைகளை இராமருக்கு வசப்படுத்த வேண்டி ஜபம் செய்தார். அந்தக் கணமே அந்த தேவதைகள் யாவும் ஒளிமயமான உடலுடன் முனிவரை வந்து வணங்கி, பின்னர் இராமபிரானை நோக்கி, "சக்கரவர்த்தித் திருமகனே! நாங்கள் உமக்குப் பணி செய்பவர்கள்" என்று சொல்லி நின்றன.

இராமர் அதைக் கேட்டு மகிழ்ந்து. அந்த தேவதைகளை வணங்கி, " யாம் அழைக்கும் போது தாங்கள் வந்து எனக்கு உதவ வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார். பின்னர் விசுவாமித்திரரைப் பார்த்து ஸ்ரீ ராமர், " முனிவர் பெருமானே! அஸ்த்திரப் பிரயோகத்தை உபதேசித்தது போல உபஸம்ஹார மந்திரங்களையும் உபதேசிக்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டார். தசரத மைந்தன் இராமனின் வேண்டுதல் படி அம்மந்திரங்களையும் உபதேசித்து, அந்தத் தேவதைகளையும் ஸ்ரீ ராமருக்கு வசப்படுத்தினார் (கௌசிகர்). பின்பு மூவரும் இரண்டு காத வழி தூரம் நடந்து சென்றதும், ஸ்ரீ ராமர் பெருமான் பெரும் ஓசை ஒன்றைக் கேட்டார். அது பற்றி, விஸ்வாமித்திரர் அவர்களிடம் ஸ்ரீ ராமரே வினவினார். அதற்கு அந்த பெரும் தவசி "அன்பு ராமா, பிரம்மனின் மனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட மானச சரசிலிருந்து உற்பத்தியாகி வரும் சரயூ ஆற்றில் கோமதி நதியும் வந்து கலப்பதால், இத்தகைய பெரும் ஓசை எழுகிறது" என்றார்.

பின்னர், அம்மூவரும் தங்களது பயணத்தை மேலும் தொடர்ந்தனர். அதன் பயனாய், பாவம் தீர்க்கும் அந்தப் புனித நதியை அடைந்தார்கள். அந்தப் பெரும் நதியைக் கண்ட ராமர் கௌசிகரிடம்," இந்த நதியின் வரலாறு என்ன? அதைத் தாங்கள் எனக்குக் கூறி அருள வேண்டும்" என்று வேண்டி நின்றார்.

கௌசிக முனிவர் அந்த நதியின் வரலாற்றை ஸ்ரீ ராம, லட்சுமணரிடம் கூறத் தொடங்கினார் " திருமாலின் திருவுந்தித் தாமரை மலரில் தோன்றிய பிரம்மதேவனின் மைந்தனும், அரசர்களுள் சிறந்த அரசனுமான குசனுக்கு வைதர்ப்பி என்ற பெயருடைய மனைவி இருந்தாள். அவர்கள் இருவரது இல்லற வாழ்வின் பயனாக குசன், குசநாபன், ஆதூர்த்தன், வசு என்ற நான்கு பிள்ளைகள் அவர்களுக்குப் பிறந்தார்கள். அவர்களுள் குசன் கௌசாம்பி நகரத்திலும், குசநாபன் மகோதய நகரத்திலும், ஆதூர்த்தன் தருமாரணிய நகரத்திலும், வசு கிரிவிரச நகரத்திலும் அரசு புரிந்து வாழ்ந்து வந்தார்கள்.

குசனாபனின் மனைவி கிருதாசி என்னும் தேவ மங்கை ஆவாள். குசனாபனுக்கு அவளிடத்தில் நூறு கட்டழகுடைய மகளிர் பிறந்தார்கள். பருவ வயதை நெருங்கிய போது அவர்கள் தங்கள் தோழி மார்களுடன் பூஞ்சோலைக்குச் சென்றனர். அப்போது அங்கே வந்த வாயு தேவன்.அந்தப் பெண்களின் அழகைக் கண்டு காமுற்றான். தன்னை மணந்து கொள்ளுமாறு அவர்களிடம் வேண்டினான்.

அதற்கு அந்தப் பெண்கள், "நாங்கள் தந்தைக்குக் கீழ்படிந்தவர்கள்.அவரிடம் சென்று தங்கள் விருப்பத்தைக் கூறுங்கள்.அதற்கு அவர் உடன் பட்டு, தாரை வார்த்து தங்களுக்கு எங்களைத் திருமணம் செய்து கொடுத்தால்.பின்பு நாங்கள் உங்களுடன் கூடுவோம்!" என்று பதில் உரைத்தனர்.ஆனால் , வாயுதேவன் அவர்கள் கூறியதை பொருட் படுத்தாமல் அப்பெண்களை மீண்டும், மீண்டும் வற்புறுத்தினான். அதற்கு, அந்தப் பெண்கள் இணங்க மறுக்கவே. கோபம் கொண்ட வாயுதேவன் உடனே அவர்களுடைய சரீரத்தில் புகுந்து அவர்களது முதுகை முறித்துக் கூனிகளாக்கினான். குசனாபனுடைய பெண்கள் நூறு பேரும், துன்பம் தாங்காமல் வாயு தேவனால் தங்களுக்கு நேர்ந்த கதியை அவர்களுடைய தந்தையிடம் விளக்கிக் கூறினார்கள். குசநாபன், தன் பெண்கள் வாயுதேவனை பதிலுக்கு சபித்து விடாமல் பொறுமையுடன் திரும்பி வந்ததன் பொருட்டு அவர்களை பாராட்டினான். பிறகு, தனது குரு மார்களின் ஆலோசனைப் படி, சூளி முனிவரின் புத்திரனான பிரம்மதத்தனுக்கு அவர்களைக் கன்னிகாதானம் செய்து கொடுத்தான்.

பிரம்மதத்தன் அவர்களை தனது கை கொண்டு தீண்டிய மாத்திரத்தில், அவர்களது கூன் நீங்கி அவர்கள் தங்களது பழைய அழகிய ரூபத்தை அடைந்தார்கள். அது கண்டு மகிழ்ந்த குசநாபன், தனது மகள்களையும், மருமகனான பிரம்மதத்தனையும் காம்பிலிய நகரத்துக்கு அனுப்பி வைத்தான். அவனுக்கு, வெகு காலமாக தனக்கு ஒரு புத்திரன் இல்லையே என்ற குறை இருந்ததால், அதனைப் போக்கிக் கொள்ள புத்திர காமேஷ்டி யாகம் செய்தான். அந்த யாகத் தீயின் மத்தியில் இருந்து காதி என்ற மகனைப் பெற்றான் குசநாபன். அந்த வேள்வியில் இருந்து பிறந்த, தனது மகனுக்கு முடி சூட்டி விட்டு குசநாபன் சுவர்க்கத்தை அடைந்தான். அந்தக் காதிக்குப் பிறந்தவர்கள் தான் நானும், சகோதிரி கௌசிகி என்பவளும்.

கௌசிகி தன் கணவராகிய ரிசீக முனிவரை நன்கு வழிபட்டு வந்தாள். அதனால், அவள் தனது உடலுடன் சுவர்க்கம் சென்று அடைந்தாள். பின்பு, நான்முகனின் கட்டளைக்கு இணங்க, உலக மக்களின் துயர் துடைக்க இமயமலைக்கு வந்து, தேவர்கள் ஆசி கூற நதியாகப் பெருகினாள். அவளே இந்தச் சரயு நதி. நான் அவளுடன் பிறந்த தொடர்பினால் அம்மலைச் சாரலிலே வசித்து வருகிறேன். இப்போது நான் செய்ய விருக்கும் வேள்வியின் பொருட்டு சித்தாசிரமத்துக்கு வந்துள்ளேன்." என்று அந்த சரயு நதியின் வரலாற்றை தம்பிமார்கள் இருவரிடமும் கூறி முடித்தார் கௌசிகர் என்னும் பெயருடைய விசுவாமித்திரர்.

முனிவர் கூறிய செய்திகளை எல்லாம் கேட்டு மகிழ்ந்த ராமன், மேலும் அம்முனிவருடன் தனது நடை பயணத்தை தொடர்ந்தான், அப்போது அவர்களது பயணத்தின் நடுவே ஒரு அழகிய சோலை ஒன்று தென்படவே,ஸ்ரீ ராமர் "இந்த அழகிய சோலையைப் பற்றிய செய்தியையும் எங்களுக்குக் கூறி அருள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார் .விசுவாமித்திரரும் அந்தச் சோலையின் கதையை அவர்கள் இருவரிடமும் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்." வீரத்தில் விளைந்த சத்திரிய குமாரர்களே, திருமால் தங்கி இருந்து நெடுங்காலம் தவம் செய்த பெருமையைப் பெற்ற இடம் இது. அவ்வாறு இருந்த அக்காலத்தில் மாவலி என்னும் சக்கரவர்த்தி, தனது வலிமையால் விண்ணையும், மண்ணையும் வசமாக்கிக் கொண்டான். மூவுலகங்களையும் வென்றான். தானே அனைத்தையும் ஆள முடியாத காரணத்தாலும், தனது நிலையில் அவன் திருப்தி அடையாத காரணத்தாலும், ஒரு மாபெரும் வேள்வியைத் தொடங்க நினைத்தான் .அதன் பொருட்டு தான் ஆண்ட இந்திர லோகத்தை தனது மந்திரிகளிடம் ஒப்படைத்தான். பின்பு அரக்கர் குலத்தில் பிறந்த மாவலி, தான் நினைத்த படியே அந்த யாகத்தை சிறப்பாக நடத்தத் தொடங்கினான். அந்த யாகத்தின் சமயத்தில், அவனிடம் யாசகம் கேட்டு வந்த அனைவருக்கும் இல்லை என்று கூறாமல், அவர்கள் கேட்டதை எல்லாம் கொடுத்தான்.

மாவலியின் அந்த யாகம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தது. ஒரு வேளை, அந்த யாகம் வெற்றி அடைந்து விட்டால். பிரகல்லாதனின் பேரனும், அசுர குலத்தின் தலைவனுமான மாவலி அதிக சக்தி படைத்தவனாக மாறிவிடுவான் என்ற உண்மையை அறிந்த இந்திரன், உட்பட அனைத்து தேவர்களும் கலங்கினர். அப்போது இந்த சோலையில் தவம் செய்து வந்த திருமாலை தேவந்திரன், தலைமையிலான அனைத்து தேவர்களும் சந்தித்து மாவலியிடம் இருந்து தங்களைக் காப்பாற்றும் படி வேண்டி நின்றனர். காக்கும் கடவுளான ஸ்ரீ ஹரி விஷ்ணு, அவர்களுக்கு அபயம் அளித்து மாவலியை தாம் பார்த்துக் கொள்வதாக, அவர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பினார்.

தேவர்களுக்கு கொடுத்த வாக்கின் படி மாவலியை கொல்லத் தீர்மானித்தார் விஷ்ணு. அதன் பொருட்டு வாமன அவதாரம் எடுத்தார். கைகளில் கமண்டலம், குள்ள உருவம், இன்னொரு கையில் ஒரு குடை, நெற்றியில் திருமண். மொத்தத்தில் பார்ப்பவர்கள் அனைவரும் தங்கள் மனதை பறிகொடுக்கும் படியான ஒரு அந்தண சிறுவனின் வடிவத்தை எடுத்தார் விஷ்ணு. மாவலி சக்கரவர்த்தியின் யாக சாலைக்கு சென்றார். அச்சமயம் சரியாக அன்றைய நாள் யாகம் முடிந்து மாவலி சக்கரவர்த்தி தன்னை நாடி வந்த அந்தணர்கள் அனைவருக்கும் அவர்கள் கேட்டபடி தானங்களை செய்து கொண்டு இருந்தார். வந்தவர்கள் அனைவரும், மனம் நிறைய திருப்தியுடன் சென்றார்கள்.

இப்போது, வாமன அவதாரம் எடுத்த மகா விஷ்ணுவின் முறை. வாமண ரூபம் எடுத்த விஷ்ணு, மாவலியிடம் சென்று பலவாறு அவரைப் புகழ்ந்து உரைத்தார். அப்புகழ் உரையைக் கேட்டு மகிழ்ந்த மாவலி சக்கரவர்த்தி," தேவரீர்! தங்களுக்கு என்ன வேண்டும்? கூறி அருளுங்கள் உடனே அவற்றை தருகிறேன்" என்றார்.

"அப்படியா? மிக்க மகிழ்ச்சி. மாவலி மன்னனே! என்னிடம் உனக்குக் கருணை உண்டென்றால், என் காலால் மூன்றடி நிலம் தருக!" என்று சொல்லி முடித்தார் வாமன ரூபத்தில் வந்த விஷ்ணு. அவ்வாறு அவர் கூறி முடிப்பதற்குள் மாவலி " தந்தேன்" என்று சொன்னார்.

அப்போது மாவலியின் அருகில் இருந்த அசுர குரு சுக்கிராச்சாரியாரின் மனம் நெருடவே. தனது ஞானக் கண் கொண்டு, வந்திருக்கும் அந்தச் சிறுவன் யார் என்று உற்று நோக்கினார். அவரது அந்தத் தவ மிகுதியான பார்வையால் அச்சிறுவனின் ரூபம் அகன்று நான்கு கைகளுடன் ,சங்கு , சக்கரம் , கதை, மற்றும் அழகிய செந்தாமரையுடன், பச்சை மா மலை போல, செம்பவள வாய் மலர மகா விஷ்ணு தனது உண்மையான தோற்றத்துடன் காட்சி அளித்தார். கண்ட காட்சியை மனதில் பதியவைத்து திடுக்கிட்டார் சுக்கிராச்சாரியார்.

மாவலியை அருகில் அழைத்தார் சுக்கிரர், அவரிடம் " சக்கரவர்த்தியே, நீ இந்தச் சிறுவனுக்கு எந்த தானமும் செய்யாதே, காரணம் வந்திருப்பது மகா விஷ்ணு. உன்னை மோசம் செய்யவே அந்தக் கபடதாரி வந்துள்ளான். எச்சரிக்கை" என்றார்.

அதைக் கேட்ட மாவலி, " அதுவா உண்மை? அப்படியானால் மிக்க மகிழ்ச்சி. நான் கண்டிப்பாக தானம் செய்தே தீர வேண்டும். எல்லோரைக் காட்டிலும் சிறந்தவர் திருமால். அவரே தமது பெருமைகளைக் குறைத்துக் கொண்டு யாசகனாய் என்னிடம் பொருள் வேண்டி நிற்கிறார். அப்படி அவரே வந்து வேண்டும் போது, அதனை அவருக்குக் கொடுப்பதே எனக்குப் பெருமையாகும்! "என்று கூறி மூன்றடி நிலத்தை வாமனனாக வந்த திருமாலுக்கு தாரை வார்த்துக் கொடுக்க, திருமால் தன் சிறிய கைகளைக் கொண்டு அந்த மாவலியின் தான நீரைப் பெறுவதற்கு நீட்டினார். அப்போது சுக்கிரன், தனது வார்த்தையை மாவலி கேட்காததால், ஒரு சிறு வண்டு வடிவங் கொண்டு நீர் பாத்திரத்தின் துவாரத்திலே நுழைந்து நீர் விழாதபடிக்கு தடுத்தார். அதனை அறிந்த திருமால் துவார சோதனை செய்பவர் போலத் தமது கையில் வைத்திருந்த தருப்பைப் புல்லை அதனுள் விட்டுக் குத்தினார். அந்தத் தருப்பைப் புல் சுக்கிரனின் ஒரு கண்ணைக் குத்திக் குருடாக்கியது. அதனால், சுக்கிரன் மிகவும் துன்பப்பட்டு அந்த இடத்தை விட்டு சென்றார். இப்போது அடைப்பு நீங்கியதும் துவாரத்தில் இருந்து நீர் கொட்டியது. மாவலி சக்கரவர்த்தி எதிர்ப்புகள் ஏதும் இன்றி திருமால் கேட்ட அந்த மூன்றடி நிலத்தை அவருக்கு தாரை வார்த்துக் கொடுத்தார்.

மாவலி தாரை வார்த்துக் கொடுத்ததும் வாமனனான திருமால் பேருருவம் கொண்டார்.அந்தக் கணத்திலேயே தமது ஓரடியால் மண்ணுலகத்தையும், மற்றொரு அடியால் விண்ணுலகத்தையும் அளந்தார்.மூன்றாவது அடிக்கு இடமில்லாது போகவே, மாவலியை நோக்கி " மன்னனே மூன்றாவது அடியை வைக்கும் இடத்தைக் காட்டு!" எனக் கேட்டார்.தான் கொடுத்த தானம் நிலை பெற தனது தலையையே சமர்பிக்க விரும்பி, " தேவரீர் உமது பொற் பாதத்தை எனது தலை மீது மூன்றாக அடியாக வைத்து அருள் புரியுங்கள்" எனக் கூறி மண்டியிட்டு தலை குனிந்தான் மாவலி.அதன்படியே வாமனனும் மாவலியின் சிரசின் மேல் தமது திருவடியை வைத்து அழுத்தி அவர் உயிர் நீங்கும் படி செய்தார்.இந்திரனுக்காக முன்பு தம்முடைய திரிலோகத்தைக் கொடுத்திருந்தார் திருமால்.அதனைக் கவர்ந்து கொண்ட மாவலி இறந்ததும், மீண்டும் அந்த லோகத்தைத் தேவேந்திரனுக்கே திருமால் திருப்பித் தந்தார்.

இப்படி இந்த இடத்தில் தவம் செய்து கொண்டே கிருதயுகத்தில் மாவலியை வதம் செய்தார் திருமால். அது மட்டும் அல்ல,இந்த சோலையில் அமைந்துள்ள ஆசிரமத்தில் தான் காசியப முனிவர் பிற்காலத்தில் தவம் செய்து சித்தி பெற்றார்." என்று விசுவாமித்திரர் அந்தச் சோலையின் சிறப்பை அந்த சத்திரிய சகோதரர்கள் இருவரிடமும் கூறி முடித்தார்.

பின்னர் விசுவாமித்திரர் மேலும் தொடர்ந்தார் "ராமா, இவ்வளவு சிறப்புகள் பெற்ற இந்த இடத்தைத் தான் நானும் எனது யாகம் நிறைவேறத் தேர்ந்தெடுத்து உள்ளேன். அதே சமயத்தில் , அரசிளங் குமாரர்களே! இந்த இடத்தில் அரக்கர்கள் அதிக அளவில் நடமாடி வருவதால். அவர்களிடம் இருந்து எனது யாகத்தைக் நீர் இருவரும் காப்பீராக" என்று கூறி விட்டு, யாகத்திற்கு வேண்டிய பொருட்களை எல்லாம் சேகரித்துக் கொண்டு, யாகத்தை தொடங்கினார் விசுவாமித்திரர்.

தசரத சக்கரவர்த்தியின் அந்த இரு மைந்தர்களும் ஆறு நாட்கள் விசுவாமித்திரர் செய்த அந்த யாகத்தைக் கண் இமைக்காமல் காத்து வந்தார்கள். ஆறாவது நாள் தாண்டியவுடன், ஆகாயத்தில் இடியும் அஞ்சும் படி, கார் காலத்து நீர் கொண்ட மேகம் போல சுபாகு மற்றும் மாரீசன் தலைமையில் பெரும் அரக்கர் கூட்டம் பறந்து வருவதை இராம, லக்ஷ்மணர் கண்டனர்.

அப்போது ஸ்ரீ ராமர் லக்ஷ்மணனிடம் மேலே பறந்து வந்த அந்தக் கொடிய அரக்கர்களை சுட்டிக் காட்டி, " முனிவர் பெருமான் சொன்ன கொடிய அரக்கர்கள், இவர்கள் தான்!" என்றார்.

வானில் பறந்து வந்த அந்த அரக்கர் கூட்டத்தார் அனைவரும் விசுவாமித்திரர் செய்த யாகத்தைக் கண்டு கோபம் கொண்டு, நர, நர வென்று தங்களது கொடிய பற்களைக் கடிக்கத் தொடங்கினர். பின்னர் வசைச் சொற்களை எல்லைகள் இன்றிப் பேசினர்.

இராமபிரான் அந்த அரக்கர்களைக் கொல்லத் தீர்மானித்தார். அவர்களைக் கொல்லும் போது வெளிப்படும், அவர்களுடைய இரத்தமும், மாமிசத் துண்டுகளும் ஓம குண்டத்தில் விழுந்து அதனால் ஓமம் பங்கம் அடையாதபடி, ஸ்ரீ ராமர் முதலில் கௌசிக முனிவர் யாகம் செய்யும் இடத்திற்கு அம்புகளைக் கொண்டே ஒரு மேல் மறைவைச் செய்தார்.பிறகு சுபாகு, மாரீசன் தலைமையில் வந்த அரக்கர் படைகளை எதிர்கொள்ளத் தயாரானார்.

முதலில் மாரீசன் மேல் மானவாஸ்த்திரத்தைப் பிரயோகித்தார். அந்த அஸ்திரம் அவனைக் கொண்டு போய் சமுத்திரத்துக்கு அப்பால் பல யோசனை தூரம் தாண்டிச் சென்று வீசியது. அடுத்து சுபாகுவின் மீது ஆக்கினேயாஸ்திரத்தை ஏவ, அது அவனை ஆகாயத்திலேயே வைத்து சாம்பல் கூட மிஞ்சாத படி எரித்தது. மற்ற அரக்கர்களின் மீது வாயவியாஸ்திரத்தைப் பிரயோகித்தார். அதனால் அஞ்சிய அந்த அரக்கர்கள் வான வீதியெங்கும் பயங்கரக் கூச்சலுடன் ஓடித் திரிந்தார்கள். ஆனாலும் ஸ்ரீ ராமரின் அந்த அஸ்திரம் அவர்களை துரத்திக் கொண்டு போய் சம்மாரம் செய்தது. மொத்தத்தில் சுபாகு, மாரீசன் தலைமையில் வந்த அரக்கர் படையில் மாரீசன் தவிர ஏனைய அரக்கர்கள் அனைவரும் அழிந்தார்கள். மாரீசன் மீது ஏனோ கருணை காட்டியே அவனை ஆகாயத்தில் தனது அஸ்திரத்தால் வீசி எறிந்தார் ராமர். இவ்வாறாக அப்பகுதியில் அன்று முதல் அரக்கர்கள் அட்டகாசம் ஒழிந்தது, அந்த வனத்தில் இருந்த முனிவர்கள் எல்லோரும் அந்த கோதண்டராமனை இதன் பொருட்டு வாழ்த்தினார்கள்.

தேவர்கள் வானுலகில் இருந்த படி வாசனை மலர்களை ராமன் மீது பொழிந்தனர். அச்சமயத்தில் விசுவாமித்திரரும் அவரது யாகத்தை வெற்றியுடன் முடிக்கவே, அவரும் ராமனை வாழ்த்தினார். இவ்வாறு அன்றைய பொழுதும் மங்களகரமாக முடிந்தது.

அடுத்த நாள், காலைப் பொழுதும் பூபால இசை கேட்க விடிந்தது, தசரத குமாரர்கள் இருவரும் தங்கள் கடமைகளை எல்லாம் முடித்து விட்டு. நெற்றியில் திருமண் அணிந்து, விசுவாமித்திரரை பார்க்கச் சென்றனர். அப்போது அந்தத் தவயோகி தியானத்தில் இருந்து எழுந்தார், ஸ்ரீ ராமர் அந்த முனிவரை நோக்கி "ஐயனே ! இன்று நான் செய்யும் பணி யாது?" என்று வினவினார்.

அம்முனிவர் அதற்கு," ஞானத்தின் பிறப்பிடமே, செய்வதற்கு இன்னும் நிறைய காரியங்கள் உள்ளன. ஆனால், அவற்றைப் பின்பு செய்யலாம். இப்பொழுது மிதிலாபுரியை ஆளும் ஜனகமகாராஜன் செய்யும் யாகத்தை நாம் போய்ப் பார்ப்போம், மிதிலாபுரியின் திசை நோக்கிப் புறப்படுக!" என்று ஆணையிட. இராம, லக்ஷ்மணர்கள் விசுவாமித்திரரைப் பின் தொடர்ந்தனர்.

விசுவாமித்திரர் இராமனுக்குப் படைக்கலம் வழங்குதல்

விண்ணவர் போய பின்றை, விரிந்த பூமழையினாலே
தண்ணெனும் கானம் நீங்கி, தாங்க அருந் தவத்தின் மிக்கோன்,
மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து அன சடையன் வெண்ணெய்
அண்ணல்தன் சொல்லே அன்ன, படைக்கலம் அருளினானே.

ஆறிய அறிவன் கூறி அளித்தலும், அண்ணல்தன்பால்,
ஊறிய உவகையோடும், உம்பர்தம் படைகள் எல்லாம்,
தேறிய மனத்தான் செய்த நல்வினைப் பயன்கள் எல்லாம்
மாறிய பிறப்பில் தேடி வருவபோல், வந்த அன்றே.

இராமன் ஏவலுக்கு படைகள் அமைந்து நிற்றல்

மேவினம்; பிரிதல் ஆற்றேம்; வீர! நீ விதியின் எம்மை
ஏவின செய்து நிற்றும், இளையவன் போல என்று
தேவர்தம் படைகள் செப்ப, செவ்விது என்று அவனும் நேர,
பூவைபோல் நிறத்தினாற்குப் புறத்தொழில் புரிந்த அன்றே.

வழியில் எதிர்ப்பட்ட நதியைக் குறித்து இராமன் வினாவுதலும், முனிவனின் விடையும்

இனையன நிகழ்ந்த பின்னர், காவதம் இரண்டு சென்றார்;
அனையவர் கேட்க, ஆண்டு ஓர் அரவம் வந்து அணுகித் தோன்ற,
முனைவ! ஈது யாவது? என்று, முன்னவன் வினவ, பின்னர்,
வினை அற நோற்று நின்ற மேலவன் விளம்பலுற்றான்:

எம் முனாள் நங்கை இந்த இரு நதி ஆயினாள் என்று,
அம் முனி புகல, கேளா, அதிசயம் மிகவும் தோன்ற,
செம்மலும் இளைய கோவும், சிறிது இடம் தீர்ந்த பின்னர்,
மைம் மலி பொழில் யாது? என்ன, மா தவன் கூறலுற்றான்:

நதியை அடுத்த சோலையின் சிறப்பை இராமன் கேட்க, முனிவன் எடுத்துரைத்தல்

தங்கள் நாயகரின் தெய்வம்தான் பிறிது இலை என்று எண்ணும்
மங்கைமார் சிந்தை போலத் தூயது; மற்றும் கேளாய்:
எங்கள் நான்மறைக்கும், தேவர் அறிவிற்கும், பிறர்க்கும், எட்டாச்
செங் கண் மால் இருந்து, மேல்நாள் செய் தவம் செய்தது அன்றே.

"பாரின்பால், விசும்பின்பாலும், பற்று அறப் படிப்பது அன்னான்
பேர்" என்ப; "அவன் செய் மாயப் பெரும் பிணககு ஒருங்கு தேர்வார்
ஆர்?" என்பான்; அமல மூர்த்தி கருதியது அறிதல் தேற்றாம்;
ஈர்-ஐம்பது ஊழி காலம் இருந்தனன் யோகத்து, இப்பால்.

முனிவன் உரைத்த மாவலி வரலாறு

ஆனவன் இங்கு உறைகின்ற அந் நாள்வாய்
ஊனம் இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண்
ஏனம் எனும் திறல் மாவலி என்பான்,
வானமும் வையமும் வவ்வுதல் செய்தான்;

செய்தபின், வானவரும் செயல் ஆற்றா
நெய் தவழ் வேள்வியை முற்றிட நின்றான்;
ஐயம் இல் சிந்தையர் அந்தணர் தம்பால்,
வையமும் யாவும் வழங்க, வலித்தான்;

ஆயது அறிந்தனர் வானவர், அந் நாள்;
மாயனை வந்து வணங்கி இரந்தார்;
"தீயவன் வெந் தொழில் தீர்" என நின்றார்;
நாயகனும், அது செய்ய நயந்தான்.

காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்
வால்-அறிவற்கு அதிதிக்கு ஒரு மகவு ஆய்,
நீல நிறத்து நெடுந்தகை வந்து, ஓர்
ஆல் அமர் வித்தின் அருங் குறள் ஆனான்.

முப்புரிநூலினன், முஞ்சியன், விஞ்சை
கற்பது ஒர் நாவன், அனல் படு கையன்,
அற்புதன்,-அற்புதரே அறியும் தன்
சிற்பதம் ஒப்பது ஒர் மெய்க்கொடு-சென்றான்.

அன்று அவன் வந்தது அறிந்து, உலகு எல்லாம்
வென்றவன், முந்தி வியந்து எதிர் கொண்டான்;
"நிந்தனின் அந்தணர் இல்லை; நிறைந்தோய்!
எந்தனின் உய்ந்தவர் யார் உளர்?" என்றான்.

ஆண்தகை அவ் உரை கூற, அறிந்தோன்,
"வேண்டினர் வேட்கையின் மேற்பட வீசி,
நீண்ட கையாய்! இனி, நின்னுழை வந்தோர்
மாண்டவர்; அல்லவர் மாண்பு இலர்" என்றான்.

சிந்தை உவந்து எதிர், "என் செய்?" என்றான்;
அந்தணன், "மூஅடி மண் அருள், உண்டேல்;
வெந் திறலாய்! இது வேண்டும்" எனா முன்,
"தந்தனென்" என்றனன்; வெள்ளி, தடுத்தான்:

"கண்ட திறத்து இது கைதவம்; ஐய!
கொண்டல் நிறக் குறள் என்பது கொள்ளேல்;
அண்டமும் முற்றும் அகண்டமும், மேல்நாள்,
உண்டவன் ஆம்; இது உணர்ந்துகொள்" என்றான்.

"நினைக்கிலை; என் கை நிமிர்ந்திட வந்து,
தனக்கு இயலாவகை தாழ்வது, தாழ்வு இல்
கனக் கரியானது கைத்தலம் என்னின்,
எனக்கு இதன்மேல் நலம் யாது கொல்?" என்றான்.

"துன்னினர் துன்னலர்" என்பது சொல்லார்,
முன்னிய நல் நெறி நூலவர்; முன்வந்து,
உன்னிய தானம் உயர்ந்தவர் கொள்க
என்னின், இவன் துணை யாவர் உயர்ந்தார்?

"வெள்ளியை ஆதல் விளம்பினை, மேலோர்
வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால்,
எள்ளுவ என் சில? இன் உயிரேனும்
கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால்.

"மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள்; மாயாது
ஏந்திய கைகொடு இரந்தவர்;-எந்தாய்!-
வீந்தவர் என்பவர்; வீந்தவரேனும்,
ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே?

"அடுப்ப வரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர்;
கொடுப்பவர் முன்பு, கொடேல் என நின்று,
தடுப்பவரே பகை; தம்மையும் அன்னார்
கெடுப்பவர்; அன்னது ஒர் கேடு இலை" என்றான்.

"கட்டுரையின், தம கைத்து உள போழ்தே
இட்டு, இசைகொண்டு, அறன் எய்த முயன்றோர்
உள் தெறு வெம் பகை ஆவது உலோபம்;
விட்டிடல் என்று விலக்கினர் தாமே."

முடிய இம் மொழி எலாம் மொழிந்து, மந்திரி,
"கொடியன்" என்று உரைத்த சொல் ஒன்றும் கொண்டிலன்;
"அடி ஒரு மூன்றும், நீ, அளந்து கொள்க" என,
நெடியவன் குறிய கை நீரில் நீட்டினான்.

கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும்,
பயந்தவர்களும் இகழ் குறளன், பார்த்து எதிர்
வியந்தவர் வெருக் கொள, விசும்பின் ஓங்கினான் -
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே.

நின்ற கால் மண் எலாம் நிரப்பி, அப்புறம்
சென்று பாவிற்றிலை, சிறிது பார் எனா;
ஒன்ற, வானகம் எலாம் ஒடுக்கி, உம்பரை
வென்ற கால் மீண்டது, வெளி பெறாமையே.

உலகு எலாம் உள்ளடி அடக்கி, ஓர் அடிக்கு
அலகு இலாது, அவ் அடிக்கு, அன்பன் மெய்யதாம்,
இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன்,-
சிலை குலாம் தோளினாய்!-சிறியன் சாலவே!

"உரியது இந்திரற்கு இது" என்று, உலகம் ஈந்து போய்,
விரி திரைப் பாற்றுடல் பள்ளி மேவினான்;
கரியவன், உலகு எலாம் கடந்த தாள் இணை
திருமகள் கரம் செக்கச் சிவந்து காட்டிற்றே!

திருமால் இருந்த இடமே வேள்விக்கு ஏற்ற இடம் என முனிவன் கூறுதல்

ஆதலால், அரு வினை அறுக்கும்; ஆரிய!
காதலால் கண்டவர் பிறவி காண்குறார்;
வேதநூல் முறைமையால் வேள்வி முற்றுவேற்கு,
ஈது அலாது இல்லை, வேறு இருக்கற்பாலதே.

இராம இலக்குவர் காவல் இருக்க, முனிவன் வேள்வி தொடங்குதல்

ஈண்டு இருந்து இயற்றுவென் யாகம், யான் எனா,
நீண்ட பூம் பழுவத்தை நெறியின் எய்தி, பின்
வேண்டுவ கொண்டு, தன் வேள்வி மேவினான்,
காண்தகு குமரரைக் காவல் ஏவியே.

எண்ணுதற்கு, ஆக்க, அரிது இரண்டு-மூன்று நாள்
விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை,
மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்,
கண்ணினைக் காக்கின்ற இமையின் காத்தனர்.

இராமன் முனிவனிடம் தீய அரக்கரின் வருகைப் பற்றி வினாவல்

காத்தனர் திரிகின்ற காளை வீரரில்
மூத்தவன், முழுது உணர் முனியை முன்னி, நீ,
தீத் தொழில் இயற்றுவர் என்ற தீயவர்,
ஏத்த அருங் குணத்தினாய்! வருவது என்று? என்றான்.

அது சமயம் அரக்கர் ஆரவாரம் செய்து வருதல்

வார்த்தை மாறு உரைத்திலன், முனிவன், மோனியாய்;
போர்த் தொழில் குமரனும், தொழுது போந்தபின்,
பார்த்தனன் விசும்பினை; -பருவ மேகம்போல்
ஆர்த்தனர், இடித்தனர், அசனி அஞ்சவே.

அரக்கர் சேனையின் திறன்

எய்தனர்; எறிந்தனர்; எரியும், நீருமாய்ப்
பெய்தனர்; பெரு வரை பிடுங்கி வீசினர்;
வைதனர்; தெழித்தனர்; மழுக் கொண்டு ஓச்சினர்;
செய்தனர், ஒன்று அல தீய மாயமே.

ஊன் நகு படைக்கலம் உருத்து வீசின,
கானகம் மறைத்தன, கால மாரி போல்;
மீன் நகு திரைக் கடல் விசும்பு போர்த்தென,
வானகம் மறைத்தன, வளைந்த சேனையே.

வில்லொடு மின்னு, வாள் மிடைந்து உலாவிட,
பல் இயம் கடிப்பினில் இடிக்கும் பல் படை,
ஒல் என உரறிய ஊழிப் பேர்ச்சியுள்,
வல்லை வந்து எழுந்தது ஓர் மழையும் போன்றவே.

அரக்கரை இலக்குவனுக்கு இராமன் காட்டுதல்

கவருடை எயிற்றினர்; கடித்த வாயினர்;
துவர் நிறப் பங்கியர்; சுழல் கண் தீயினர்;
பவர் சடை அந்தணன் பணித்த தீயவர்
இவர் என, இலக்குவற்கு இராமன் காட்டினான்.

உடனே அம்பு எய்து வீழ்த்துவதாக இலக்குவன் கூறுதல்

ஈண்ட அக் குமாரனும், கடைக் கண் தீ உக,
விண்தனை நோக்கி, தன் வில்லை நோக்கினான்;
அண்டர் நாயக! இனிக் காண்டி, ஈண்டு அவர்
துண்டம் வீழ்வன என, தொழுது சொல்லினான்.

வேள்விச் சாலையின்மேல் இராமன் சரக்கூடம் அமைத்தல்

தூம வேல் அரக்கர்தம் நிணமும் சோரியும்
ஓம வெங் கனலிடை உகும் என்று உன்னி, அத்
தாமரைக் கண்ணனும், சரங்களே கொடு,
கோ முனி இருக்கை, ஓர் கூடம் ஆக்கினான்.

இராமன் போர் செய்யத் தொடங்குதல்

நஞ்சு அட எழுதலும் நடுங்கி, நாள்மதிச்
செஞ் சடைக் கடவுளை அடையும் தேவர்போல்,
வஞ்சனை அரக்கரை வெருவி, மா தவர்,
அஞ்சனவண்ண! நின் அபயம் யாம் என்றார்.

தவித்தனன் கரதலம்; கலங்கலீர் என,
செவித்தலம் நிறுத்தினன், சிலையின் தெய்வ நாண்;
புவித்தலம் குருதியின் புணரி ஆக்கினன்;
குவித்தனன், அரக்கர்தம் சிரத்தின் குன்றமே.

இராமனின் அம்பு சுபாகுவைக் கொன்று, மாரீசனைக் கடலில் சேர்த்தல்

திருமகள் நாயகன் தெய்வ வாளிதான்,
வெருவரு தாடகை பயந்த வீரர்கள்
இருவரில் ஒருவனைக் கடலில் இட்டது; அங்கு
ஒருவனை அந்தகபுரத்தின் உய்த்ததே.

இறவாது எஞ்சிய அரக்கர்கள் அஞ்சி ஓடுதல்

துணர்த்த பூந் தொடையலான் பகழி தூவினான்;
கணத்திடை விசும்பினைக் கவித்துத் தூர்த்தலால்,
பிணத்திடை நடந்து இவர் பிடிப்பர் ஈண்டு எனா
உணர்த்தினர், ஒருவர்முன் ஒருவர் ஓடினார்.

பிற போர்க் கள நிகழ்ச்சிகள்

ஓடின அரக்கரை உருமின் வெங் கணை
கூடின; குறைத் தலை மிறைத்துக் கூத்து நின்று
ஆடின; அலகையும், ஐயன் கீர்த்தியைப்
பாடின; பரந்தன, பறவைப் பந்தரே.

தேவர்கள் இராமனை வாழ்த்துதல்

பந்தரைக் கிழித்தன, பரந்த பூ மழை;
அந்தர துந்துமி முகிலின் ஆர்த்தன;
இந்திரன் முதலிய அமரர் ஈண்டினார்;
சுந்தர வில்லியைத் தொழுது வாழ்த்தினார்.

புனித மா தவர் ஆசியின் பூ மழை பொழிந்தார்;
அனைய கானத்து மரங்களும் அலர் மழை சொரிந்த;
முனியும், அவ் வழி வேள்வியை முறைமையின் முற்றி,
இனிய சிந்தையன், இராமனுக்கு இனையன இசைத்தான்;

வேள்வியை இனிது முடித்த முனிவன் இராமனைப் பாராட்டுதல்

பாக்கியம் எனக்கு உளது என நினைவுறும் பான்மை
போக்கி, நிற்கு இது பொருள் என உணர்கிலென் - புவனம்
ஆக்கி, மற்றவை அனைத்தையும் அணி வயிற்று அடக்கி,
காக்கும் நீ, ஒரு வேள்வி காத்தனை எனும் கருத்தே.

யான் இனி செய்யவேண்டிய பணி யாது? என இராமன் முனிவனைக் கேட்டல்

என்று கூறிய பின்னர், அவ் எழில் மலர்க் கானத்து,
அன்று, தான் உவந்து, அருந் தவ முனிவரோடு இருந்தான்;
குன்றுபோல் குணத்தான் எதிர், கோசலை குருசில்,
இன்று யான் செயும் பணி என்கொல்? பணி! என இசைத்தான்.

முனிவன் சனகன் வேள்வியைக் காணச் செல்வோம் என்று சொல்ல, மூவரும் மிதிலைக்குப் புறப்படுதல்

அரிய யான் சொலின், ஐய! நிற்கு அரியது ஒன்று இல்லை;
பெரிய காரியம் உள; அவை முடிப்பது பின்னர்;
விரியும் வார் புனல் மருதம் சூழ் மிதிலையர் கோமகன்
புரியும் வேள்வியும், காண்டும் நாம்; எழுக! என்று, போனார்.

மானச மடுவில் தோன்றி வருதலால், சரயு என்றே
மேல் முறை அமரர் போற்றும் விழு நதி அதனினோடும்,
ஆன கோமதி வந்து எய்தும் அரவம் அது என்ன, அப்பால்
போனபின், பவங்கள் தீர்க்கும் புனித மா நதியை உற்றார்.

சுரர் தொழுது இறைஞ்சற்கு ஒத்த தூ நதி யாவது? என்றே,
வரமுனிதன்னை, அண்ணல் வினவுற, மலருள் வைகும்
பிரமன் அன்று அளித்த வென்றிப் பெருந்தகைக் குசன் என்று ஓதும்
அரசர்கோன் அளித்த மைந்தர் அரு மறை அனைய நால்வர்;

குசன், குசநாபன், கோது இல் குணத்தின் ஆதூர்த்தன், கொற்றத்து
இசை கெழு வசு, என்று ஓதும் இவர் பெயர்; இவர்கள் தம்முள்,
குசன் கவுசாம்பி, நாபன் குளிர் மகோதயம், ஆதூர்த்தன்
வசை இல் தன்மவனம், மற்றை வக் கிரிவிரசம், வாழ்ந்தார்.

அவர்களில் குசநாபற்கே ஐ-இருபதின்மர் அம்சொல்
துவர் இதழ்த் தெரிவை நல்லார் தோன்றினர் வளரும் நாளில்
இவர் பொழில்-தலைக்கண் ஆயத்து எய்துழி, வாயு எய்தி,
கவர் மனத்தினனாய், அந்தக் கன்னியர் தம்மை நோக்கி,

கொடித்தனி மகரம் கொண்டான் குனி சிலைச் சரத்தால் நொந்தேன்;
வடித் தடங் கண்ணீர்! என்னை மணத்திர் என்று உரைப்ப, "எந்தை
அடித்தலத்து உரைத்து, நீரோடு அளித்திடின், அணைதும்" என்ன,
ஒடித்தனன் வெரிநை; வீழ்ந்தார், ஒளி வளை மகளிர் எல்லாம்.

சமிரணன் அகன்றதன் பின், தையலார், தவழ்ந்து சென்றே,
அமிர்து உகு குதலை மாழ்கி, அரசன் மாட்டு உரைப்ப, அன்னான்,
நிமிர் குழல் மடவார்த்தேற்றி, நிறை தவன் சூளி நல்கும்
திமிர் அறு பிரமதத்திற்கு அளித்தனன், திரு அனாரை.

அவன் மலர்க் கைகள் நீவ, கூன் நிமிர்ந்து, அழகு வாய்த்தார்;
புவனம் முற்றுடைய கோவும், புதல்வர் இல்லாமை, வேள்வி
தவர்களின் புரிதலோடும், தகவு உற, தழலின் நாப்பண்,
கவனவேகத் துரங்கக் காதி வந்து உதயம்செய்தான்.

அன்னவன் தனக்கு, வேந்தன், அரசொடு, முடியும் ஈந்து,
பொன்னகர் அடைந்த பின்னர், புகழ் மகோதயத்தில் வாழும்
மன்னவன் காதிக்கு, யானும், கவுசிகை என்னும் மாதும்,
முன்னர் வந்து உதிப்ப, அந்த முடியுடை வேந்தர் வேந்தன்.

பிருகுவின் மதலை ஆய, பெருந் தகைப் பிதாவும் ஒவ்வா,
இரிசிகன் என்பவற்கு மெல்லியலாளை ஈந்தான்;
அரு மறையவனும் சில் நாள் அறம் பொருள் இன்பம் முற்றி,
விரி மலர்த் தவிசோன் தன்பால் விழுத் தவம் புரிந்து மீண்டான்.

காதலன் சேணின் நீங்க, கவுசிகை தரிக்கலாற்றாள்,
மீது உறப் படாலுற்றாள், விழு நதி வடிவம் ஆகி;
மா தவர்க்கு அரசு நோக்கி, "மா நிலத்து உறுகண் நீக்கப்
போதுக, நதியாய்" என்னா, பூமகன் உலகு புக்கான்.

எடுத்து ஒருவர்க்கு ஒருவர் ஈவதனின் முன்னம்,
தடுப்பது நினக்கு அழகிதோ, தகவு இல் வெள்ளி?
கொடுப்பது விலக்கு கொடியோய்! உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்!.

குறியவன் கையில் நீர் விழாமல், குண்டிகை
மறிபட, வாமனன் மலர்க் கைத் தர்ப்பையால்,
செறிவது நீக்கிட, சிதைந்து கண் உடைந்து
உறு துயர் வெள்ளியும் ஒதுங்கிப் போயினான்.

நீட்டிய வேலையில் நீரை மாற்றினான்;
நாட்டம் அது அகத்துளான், சிலம்பின் நாமத்தான்,
ஓட்டினன் தருப்பையை; உடை கண் நீர் விழ,
வாட்டம் இல் அந்தணன் மலர்க் கை நீட்டினான்.