
தாடகை வதைப் படலம்

பாலகாண்டம்
பால என்பது தோற்ற வரலாற்றைக் குறிப்பதாகும். இராமனது இளவயது வாழ்வைக் குறிப்பதனால் இது பாலகாண்டம் என வழங்கப்பட்டது. பாலகாண்டம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
தாடகை வதைப் படலம்
(தாடகை என்னும் அரக்கியை இராமபிரான் விசுவாமித்திர முனிவனது விருப்பத்தின்படி கொன்றருளிய கதையைக் கூறும் பகுதி இதுவாகும். அங்க நாட்டிலுள்ள காமன் ஆச்சிரமச் சிறப்பை முனிவன் ராமனுக்குக் கூறுதலும். அங்குத் தங்கி மறுநாள் மூவரும் பாலைவனம் ஒன்றை அடைதலும். பாலையின் வெம்மையைத் தாங்கும் பொருட்டு இராம, இலக்குவர்களுக்கு விசுவாமித்திரன் இரு மந்திரங்களை உபதேசித்தலும் - தாடகையின் வரலாறு கூறுதலும் – தாடகையின் வருகையும் - பெண் என நினைத்த ராமன் கணைதொடாது நிற்றலும். முனிவன் ராமனை வேண்டுதலும் - முனிவன் ஏவலுக்கு இராமன் இசைதலும்-இராமன் அம்பேவித் தாடகையைக் கொல்லுதலும் -வானவர் அதனால் மகிழ்ந்து இராமனை வாழ்த்தலும் இப்படலத்துள் விவரித்துக் கூறப்பட்டுள்ள செய்திகளாகும்.)
விசுவாமித்திரர் இராமபிரானை நோக்கி,"இந்தச் சோலையைப் பற்றிக் கேட்டாய் அல்லவா? இதனை காமன் ஆசிரமம் என்று அழைப்பார்கள். இது சிவபெருமான் யோகாப்பியாசம் செய்த இடமாகும். சிவபெருமானின் யோகாப்பியாசத்தை கெடுக்கும் வகையில் மன்மதன் அவர் மீது மலர் அம்புகளைத் தொடுத்தான். அதனால் தனது யோகாப்பியாசம் கலைந்த சிவ பெருமான் கோபம் கொண்டு, தனது நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்தார். ஆனால், மன்மதன் அமுதம் உண்ட பயனாக அவன் உயிர் இழக்காமல் அரூபியாக (ரூபம் இல்லாதவனாக) மாறினான். அது மட்டும் அல்ல, கஜாசுரன் என்பவன் அருந்தவம் செய்து பெரு வரம் பெற்றவன். பெற்ற வரத்தால் மமதை கொண்ட அந்த அரக்கன் தேவர்களை துன்புறுத்த ஆரம்பித்தான். அவனுக்கு அஞ்சிய தேவர்கள், இந்த இடத்தில் தவம் செய்து வந்த ஈசனை சரணம் அடைந்தார்கள். தன்னை சரணம் அடைந்த அந்த தேவர்களுக்கு அபயம் அளித்தார் சிவபெருமான். கோபமுற்ற கஜாசுரன் சிவனையே எதிர்த்துப் போர் செய்ய இந்த இடத்திற்கு வந்தான். அவனை தோற்கடித்து தனது காலால் உதைத்துத் தள்ளிக் கொன்றார் ஈசன். அத்துடன் அவனது தோலையும் உரித்துப் போர்த்துக் கொண்டார்" என்று பதில் உரைத்தார்.
அப்போது அங்கு வசிக்கும் முனிவர்கள், அம்மூவரும் வருவதைக் கண்டு அவர்களை வரவேற்று உபசரித்தார்கள். அந்த முனிவர்களின் வேண்டுதலை ஏற்று அம்மூவரும் அங்கேயே தங்கி, மறுநாள் தங்கள் பயணத்தை தொடர்ந்தார்கள். அன்றைய நடுப்பகலில் ஒரு பாலை வனத்தை வந்து அடைந்தார்கள்.
அப்பாலைவனத்தின் வெப்பம் பூவைக் காட்டிலும் மென்மையான இராமபிரானையும், அவன் தம்பி லக்ஷ்மணனையும் தாக்காமல் இருக்க, பிரம்ம தேவனால் தனக்கு உபதேசிக்கப் பட்ட " பலை, அதிபலை " என்னும் இரண்டு வித்தைகளையும் அவர்களுக்குச் சொல்லித் தந்தார் கௌசிக முனிவர். அக்கணமே அவர்கள் இருவருக்கும் அந்த மந்திரம் நன்றாக அவர்கள் மனதிலே பதிந்தது. அந்த மந்திரத்தின் பயனாக சூரிய வெப்பத்தால் சுட்டெரிக்கும் அந்தப் பாலைவனம் அவர்களுக்குக் குளிர்ந்த சோலையாகத் தோன்றியது. என்றாலும், ஸ்ரீ ராமர் மனதில் அந்தப் பாலைவனம் இதற்கு முன்னர் வெப்பமாக இருந்த காரணம் என்ன என்று அறியத் துடித்தார். தனது சந்தேகத்தை கௌசிக முனிவரிடத்திலேயே கேட்டு விட விளைந்தார்.
பிறகு, ஸ்ரீ ராமர் கௌசிக முனிவரிடத்தில்," இந்த நிலம் வெப்பமாவதற்கு என்ன காரணம்? காமனை எரித்த சிவபெருமானுடைய விழித் தீ இங்கே பட்டதா? இல்லை, வேறு எதனால் இந்த வெப்பம் ஏற்பட்டது?" என்று கேட்டார்.
கௌசிக முனிவர் அதைக் கேட்டு இராமனைப் பார்த்து, "அதற்கு உரிய காரணத்தை சொல்கிறேன், கேள்.சுகேது என்னும் ஒருவன் யட்ச குலத்தில் தோன்றினான்.அவன் யானை போன்ற கம்பீரத் தோற்றம் உடையவன்.மிக்க வலியவன்.அதே போல, மிகுந்த கோபத்தை உடையவனும் கூட.அவனுக்கு புத்திர பாக்கியம் கிடைக்க வில்லை. அதனால் புத்திர பாக்கியம் வேண்டி பிரம்மனை நோக்கிக் கடும் தவம் புரிந்தான்.அவனது தவத்தைக் கண்டு மகிழ்ந்து பிரம்மதேவனும் அவனுக்கு முன் தோன்றி,அவனது விருப்பப்படி "பேரழகியும் ஆயிரம் மத யானைகளின் பலத்தையும் கொண்ட ஒரு பெண் உனக்குத் தோன்றுவாள்" என்று கூறி மறைந்தார். பிரம்மனின் வாக்குப் படி சுகேதுவுக்கு ஒரு பெண் பிறந்தாள். அவளுக்கு, அவன் தாடகை என்று பெயரிட்டான்.அப்பெண் மணப்பருவம் அடைந்ததும் அவளைத் தனது இனத்தைச் சேர்ந்த யட்சர் தலைவனான சுந்தனுக்கு மணம் செய்து கொடுத்தான். சுந்தனும், தாடகையும் இரவும் பகலும் முடிவில்லாமல் இன்பம் அனுபவித்தார்கள். அநேக நாட்கள் கழித்துத் தாடகை மலை போன்ற மாரீசனையும் மற்போரில் சிறந்த சுபாகுவையும் பெற்றெடுத்தாள். அக்குமாரர்கள் இருவரும் மாயை முதலியவற்றுடன் வளர்ந்தார்கள்.
அப்போது அவர்களின் தந்தையான சுந்தன் செருக்குடன் தனது பலத்தின் மீது கர்வம் கொண்டு அகத்திய முனிவரின் ஆசிரமத்துக்குள் அத்துமீறி நுழைந்ததுடன் மட்டும் இல்லாமல், அங்கு சுகந்திரமாக சுற்றித் திரிந்த மான்களை எல்லாம் உண்ணத் தொடங்கியதுடன் ஆசிரமத்தை சூழ்ந்து இருந்த அழகிய மரங்களை எல்லாம் பிடுங்கி எறிந்தான். இதனைக் கண்ட அகத்திய முனிவர் கோபம் கொண்டு கண்களில் தீப்பறக்க சுந்தனை நோக்கினார். அந்தக் கணத்திலேயே சுந்தன் எரிந்து சாம்பல் ஆனான். தன் கணவன் இறந்து விட்ட செய்தி கேட்டத் தாடகை கோபத்துடன் "நான் அந்த முனிவரை கொன்று உண்பேன்" என்று சபதம் செய்தபடி அகத்திய முனிவரின்ஆசிரமத்தை நோக்கி விரைந்தாள்.
தாடகைக்குப் பாதுகாப்பாக அவளது இரு பலசாலியான புத்திரர்களும் உடன் சென்றார்கள். ஆசிரமத்தை அடைந்த அந்த மூவரும் பெரும் அட்டகாசம் செய்தனர். இதனால் கோபம் கொண்ட அகத்திய முனிவர், அம்மூவரையும் " யட்சர் குலத்தில் பிறந்திருந்தும், அரக்கர்கள் போல நடந்து கொண்டீர்கள் அதனால் நீங்கள் அரக்கர்களாக மாறுவீர்களாக" என்று சாபம் கொடுத்தார்.
அகத்திய முனிவரின் சாபத்தின் படியே அம்மூவரும் அரக்கர்களாக மாறினார்கள். அந்த உருவத்துடனேயே அவ்விடத்தை விட்டு நீங்கி இராவணனுடைய தாய் கேகசியைப் பெற்ற அரக்கர் அரசனான சுமாலியிடம் வந்து சேர்ந்தார்கள். அவனிடம்,"உனக்கு நாங்கள் சிறந்த புத்திரர்களாவோம்" என்று கூறி உறவு கொண்டாடினார்கள். சுமாளியுடன் அந்த இரு அரக்கர்களான சுபாகு மற்றும் மாரீசன் பாதாள லோகத்தில் வெகு காலம் தங்கினார்கள். பிறகு குபேரனிடம் இருந்த இலங்கையை இராவணன் கைப்பற்றியவுடன். சுமாலி முதலியோருடன், சுபாகுவும், மாரீசனும் இலங்கைக்கு சென்று விட்டனர். இலங்கை வேந்தன் இராவணன் அவர்களை மாமன் என்று அழைத்து உறவு கொண்டாடினான். அந்த துஷ்ட ராவணனின் தூண்டுதலால்,அந்த தாடகையின் இரு புத்திரர்களான சுபாகுவும், மாரீசனும் உலகம் முழுவதும் சுற்றித் திரிந்து இன்றும் அக்கிரம செய்கைகளைப் புரிந்து வருகின்றனர்.
மறுபுறம் தாடகையும் "ஒரு முனிவரால் தானே எனது கணவர் இறந்தார்" எனக் கூறிக் கொண்டு அனைத்து முனிவர்களையும் பழி வாங்கக் கிளம்பி விட்டாள். அவள் நிரந்தரமாக வசிக்க ஒரு இடம் தேவைப்பட்டது, நெருப்புப் போல கொதிக்கின்ற மனமுடையவளாய் , வழி முழுவதும் அக்கினி வீசுகின்ற இந்த இடத்துக்கு வந்து சேர்ந்தாள். அவளால், அந்த நிலவைக் கூட பெயர்த்து எடுக்க முடியும், கடல் நீரைக் கூட அவள் பருகி விடும் அளவுக்கு சக்தி படைத்தவள். மேல் உலகத்தைக் கூட இடித்துத் தள்ளி விடுவாள், அத்தனை வல்லமை பொருந்தியவள். அவளது தோற்றம் பார்ப்பவர்கள் மத்தியில் மரண பயத்தை தோற்றுவிக்கும், விஷத்துடனும், இடியோசை போன்ற பெரிய ஒலியுடனும், பிரளய காலத்து அக்கினியுடனும், பெரிய இரண்டு மலைகளையும், இரண்டு பிறைச் சந்திரர்களையும் கொண்டு வரும் கடலைப் போன்ற உடலுடன் அவள் தோன்றுவாள். அந்தப் பொல்லாத தாடகை வசிப்பதால் தான் இந்த இடம் இப்படிப் பாலைவனம் போல மாறியது. மேலும், அவள் இலங்கை மன்னனான இராவணின் கட்டளைப்படி எனது வேள்விக்கும் இடையூறு செய்கிறாள். இந்த பிராந்தியத்தில் வசிக்கும் அப்பாவி உயிர்களை எல்லாம் கொன்று குவிக்கிறாள்.இன்னும் அவளைப் பற்றிக் கூற வேண்டுவதில்லை.அவளை நீ கொல்லாவிட்டால் இந்த தேசம் மட்டும் அல்ல, இந்த உலகமே அழிந்து விடும்!" என்று கூறி முடித்தார் விசுவாமித்திரர்.
விசுவாமித்திரர் சொன்ன விவரங்களை எல்லாம் இராமபிரான் இடக்கையில் வில்லைத் தாங்கிய படி பொறுமையுடன் கேட்டு முடித்துப் பிற்பாடு விசுவாமித்திரரை நோக்கி," தேவரீர் ! இந்தக் கொடும் செயலைப் தொழிலாகச் செய்து வரும் அந்தத் தாடகை சரியாக எந்த இடத்தில் இப்பிரதேசத்தில் வசிக்கிறாள்?" என்று கேட்க.
இராமபிரானின் கேள்விக்கு முனிவர் பதில் சொல்லத் தொடங்கிய போது தாடகையே அந்த இடத்திற்கு வந்தாள். அவள் அங்கே வந்த பொழுது, தனது கால்களை ஊன்றி வைக்க, அக்கால்களின் பாரத்தை தாங்க மாட்டாமல் நிலம் குழிபட்டது.
கோபத்துடன் அவர்களுக்கு அருகில் வந்த தாடகை தன் சிவந்த கண்களால் நெருப்புப் பொறி பறக்க அவர்களை விழித்துப் பார்த்தாள். மேலும் எரிமலை போலவும், புயல் சூழ்ந்த கடல் போலவும், இடியின் ஓசை போலவும், ஏழு உலகங்களும் பயப்பட அப்படி ஒரு ஆரவாரத்தை செய்தாள் தாடகை. பிறகு, அம்மூவரையும் பார்த்து மிகவும் ஏளனமாகச் சிரித்தாள். பின்னர் பெருங்குரலில், " அற்ப மானிடப் பதர்களே, நீங்கள் இங்கு வந்ததன் நோக்கம் தான் என்ன? இங்கு வந்து மரணம் அடைய வேண்டும் என்ற உங்கள் ஊழ்வினை காரணமாக வந்தீர்களா? இல்லை, இங்குள்ள உயிர்களை எல்லாம் கொன்று தின்று விட்டு, மேற்கொண்டு உணவு கிடைக்காமல் பசி உடன் வாடும் எனக்கு உணவாக இங்கே வந்தீர்களா?" என்று ஆணவமாக அவர்களைப் பார்த்துக் கேட்டாள் தாடகை.
மேலும், அவள் தனது கூறிய வேலினை அவர்களது மார்புக்கு முன்னாள் நீட்டி, "இந்த வேலால் உங்கள் மார்புகளைப் பிளந்து விடுவேன்" என்று கூறிய படி பற்களை நற, நற வென்று கடித்தாள். தாடகையின் அட்டகாசங்களை எல்லாம் பொறுமையுடன் பார்த்துக் கொண்டு இருந்தார் இராமபிரான். தம்பி லக்ஷ்மணனுக்கோ தாடகையின் சொல் கேட்டுப் பெரும் கோபம், ஆனால் ஸ்ரீ ராமரின் பொறுமை தம்பி லக்ஷ்மணனுக்கு புரியாத புதிராகத் தான் இருந்தது. ஆனால், ஸ்ரீ ராமர் பொறுமையுடன் இருந்த காரணத்தை விசுவாமித்திரர் நன்கு அறிவார். ஸ்ரீ ராமரின் எண்ணம் யாதெனில்,தாடகை ஒரு அரக்கியாகவே இருந்தாலும், அவளும் ஒரு பெண்தானே, பெண் கொலை பெரும் பாவமாயிற்றே என்று கொஞ்சம் பொறுமை காத்தார் அவ்வளவு தான்.
இதனை அறிந்த கௌசிக முனிவரான, விசுவாமித்திரர் இராமபிரான்டம்" இராமா! தசரதன் பெற்றத் திருமகனே! எவ்வளவு தீங்கு விளைவிக்க முடியுமோ அத்தனை தீங்கையும் என்னைப் போன்ற ரிஷிகளுக்கு விளைவித்து விட்டாள் இந்தத் தாடகை. நீ நினைப்பது போல் பெண்களைக் கொலை செய்வது பாவம் தான்; பலரும் கேலி செய்யக் கூடிய காரியம் தான். ஆனால், தாடகையோ பெண் என்ற ரூபத்தில் இருக்கும் ஆண்மை உள்ள பிசாசு. தனது பெயரை இவள் சொன்ன மாத்திரத்தில் பெரும் வீரர்கள் கூட சண்டையிடப் பயந்து பின்வாங்கிப் போவார்கள். இந்திரன் உட்பட ஏனைய தேவர்களுடனும் இவள் ஒரே நேரத்தில் சண்டையிட்டு வெற்றிக் கொள்ளக் கூடியவள். அப்படிப்பட்ட இவள் ஆண்மை நிறைந்து உள்ளவள் தானே? தவிர மந்திர மலை போன்ற பருத்த தோள்களை இந்தத் தாடகை பெற்று இருக்கிறாள். அப்படி என்றால், ஆடவர்களுக்கும், இவளுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?" என்றார்.
மேலும் கௌசிக முனிவர் தொடர்ந்தார்," சக்கரவர்த்தித் திருமகனே! வேறு ஒரு செய்தியையும் நான் உனக்குக் கூறக் கடமைப் பட்டு இருக்கிறேன். அது யாதெனில், முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கடுமையான போர் நடந்தது. அப்போது போரில் அசுரர்கள் தோற்று, திருமால் அவர்களைத் துரத்த, அவர்கள் ஓடிப் போய் பிருகு முனிவரின் ஆசிரமத்தில் நுழைந்து, அம்முனிவரின் பத்தினியான கியாதி என்பவளிடம் அடைக்கலம் கேட்டனர். அவளும் அவர்களுக்கு அபயம் கொடுத்துத் தனது ஆசிரமத்தில் மறைத்துக் காத்து வந்தாள். அதனை அறிந்த திருமால் பகைவரான அசுரரைக் காட்டும் படி அவளிடம் கேட்டார். எவ்வளவு வற்புறுத்தியும் அவள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் திருமால் அவளது தலையை தனது சுதர்ஷன சக்கரம் கொண்டு வெட்டினார். பின்பு, அந்த அசுரர்களையும் கொன்று ஒழித்தார். அதைப் போலத் தான் உலகங்களை எல்லாம் பாழடையச் செய்ய வேண்டும் என்று கருதிய விரோசனனுடைய மகளாகிய மந்தரை என்பவளைத் தேவேந்திரன் கொன்று ஒழித்தான். இவ்வாறு பெண் கொலையால் திருமாலுக்கும், தேவேந்திரனுக்கும் புகழ் தான் உண்டாயிற்று. பழி உண்டாகவில்லை.
அது போலத் தான், இந்த தாடகை என்ற அரக்கியை, நீ வதம் செய்தால் உனக்குப் புகழ் தான் உண்டாகும். சூரிய குலத்தில் தோன்றிய செல்வனே! தருமத்தை ஒழித்த இந்தத் தாடகைக்கு இதை விட வேறு ஆண்மை வேண்டுமா? யம தர்ம ராஜன் கூட பெண் என்று எல்லாம் பேதம் பார்க்காமல், அனைத்து உயிர்களையும் சமமாகக் கருதி வினைப் பயனுக்கு தகுந்த படி கொண்டு செல்கிறான். அந்த வகையில் நீயும் உனது கடமையை செய். நீ இவளிடம் கொண்ட கோபம் தணிந்தது அருளாகாது. எனவே, நீ உடனே இந்த அரக்கியைக் கொள்வாயாக" என்று விவரமாகக் கூறி முடித்தார் கௌசிக முனிவர்.
கௌசிக முனிவரின் வார்த்தைகளை கேட்ட ஸ்ரீ ராமர் தெளிவடைந்தார். விசுவாமித்திரரிடம் "முனிவர்களுள் தலை சிறந்தவரே, உமது வார்த்தைகளே எமக்கு வேத வாக்கியம். உமது சொல்படி இந்தத் தாடகை என்ற அரக்கியை நான் நிச்சயம் எனது அஸ்த்திரங்கள் கொண்டு கொல்வேன்" என சூளுரைத்தார்.
இவர்கள் இருவரது உரையாடலையும் கேட்டுக் கொண்டு இருந்த தாடகை மிகவும் கோபம் கொண்டாள். ஒரு சூலாயுதத்தை வரவழைத்து ஸ்ரீ ராமர் மீது அதி வேகமாக வீசினாள். விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமர் அந்தக் கணத்திலேயே பாணத்தை எடுத்துப் பிரயோகித்தார்.அவர் அழகிய வில்லின் குதையை வளைத்ததை எவரும் காணவில்லை. அதே போல பாணம் எடுத்துப் பிரயோகித்ததையும் கூட யாரும் காணவில்லை. எல்லாம் கண நேரத்தில் நடந்து முடிந்து விட்டது. ஆனால், அதே சமயத்தில் தாடகை எறிந்த சூலாயுதம் மட்டும் இராம பாணம் பட்டு துண்டுகளாகி விழுந்தததை எல்லோரும் பார்த்தார்கள்.
தாடகையின் கோபம் எல்லை மீறியது, தனது முழு அசுர சக்தியையும் பிரயோகித்து கல் மலையை ஸ்ரீ ராமர் மீது பெய்தாள். ஸ்ரீ ராமர் வில்லை வளைத்து அம்பு மலை பெய்யச் செய்து, அக்கல்மழை தம் மேல் விலாதபடிக்குத் தடுத்தார். தாடகை செய்வதறியாது திகைத்து நின்றாள், இப்படி ஒரு எதிர்ப்பை அவள் தனது வாழ் நாளில் பார்த்தது கூட கிடையாது. அக்கணத்தில் ஸ்ரீ ராமர் ஒரு சக்தி வாய்ந்த பாணத்தை தாடகை மீது ஏவினார். அந்த அம்பு வச்சிர மலையில் உள்ள கல்லைப் போன்ற உறுதியான அவளது மார்பில் தைத்தது. பின்பு, அங்கே தங்கியிராமல் அவளது முதுகுப்புறமாக உருவிக் கொண்டு, போய்விட்டது.
அடுத்த கணம் தாடகை தனது நெஞ்சில் பாய்ந்த இராம பாணத்தின் வேகத்தைத் தாங்க மாட்டாமல் கீழே விழுந்தாள். புழுதி பறந்த அந்தக் காட்டில் தாடகையின் ஆவி பிரிந்தது. அவளுடைய அழிவே, இராவணின் அழிவுக்கு உறுதி கூறுவதாக அமைந்தது.
வானுலகில் இருந்தபடி ராம, தாடகை யுத்தத்தைக் கண்டு கொண்டு இருந்த தேவர்கள். தாடகை இறந்த மாத்திரத்தில் ஸ்ரீ ராமர் மீது பூ மழை பொழிந்தனர். அத்துடன் விசுவாமித்திரர் முன் தோன்றிய தேவர்கள் அவரிடம் " இனி அசுரர்களின் அழிவு நிச்சயம், தாங்கள் தேவர்களாகிய எங்களின் பொருட்டு உங்களிடம் இருக்கும் திவ்ய அஸ்த்திரங்கள் அனைத்தையும் ராம, லக்ஷ்மனரிடம் தயை கூர்ந்து தந்து விடுங்கள்" என்று கூறி விட்டுச் சென்றனர்.
விசுவாமித்திரன் கூறிய அங்க நாட்டு வரலாறும், காமன் ஆச்சிரமப் பெருமையும்
திங்கள் மேவும் சடைத் தேவன்மேல், மாரவேள்,
இங்கு நின்று எய்யவும், எரிதரும் நுதல் விழிப்
பொங்கு கோபம் சுட, பூளை வீ அன்ன தன்
அங்கம் வெந்து, அன்று தொட்டு அனங்கனே ஆயினான்.
வாரணத்து உரிவையான் மதனனைச் சினவு நாள்,
ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால், இவண் எலாம்,
ஆரணத்து உறையுளாய்! அங்க நாடு; இதுவும், அக்
காரணக் குறியுடைக் காமன் ஆச்சிரமமே.
பற்று அவா வேரொடும் பசை அற, பிறவி போய்
முற்ற, வால் உணர்வு மேல் முடுகினார் அறிவு சென்று
உற்ற வானவன், இருந்து யோகு செய்தனன் எனின்,
சொற்றவாம் அளவதோ, மற்று இதன் தூய்மையே?
இரவு தங்கி, மறுநாள் மூவரும் ஒரு பாலைவனம் சேர்தல்
என்று, அ(வ்) அந்தணன் இயம்பலும், வியந்து, அவ் வயின்
சென்று, வந்து எதிர் தொழும் செந் நெறிச் செல்வரோடு
அன்று உறைந்து, அலர் கதிர்ப் பரிதி மண்டிலம் அகன்
குன்றின் நின்று இவர, ஓர் சுடு சுரம் குறுகினார்.
பாலை நிலத்தின் தன்மை
பருதிவானவன் நிலம் பசை அறப் பருகுவான்
விருது மேற்கொண்டு உலாம் வேனிலே அல்லது ஓர்
இருது வேறு இன்மையால், எரி சுடர்க் கடவுளும்
கருதின், வேம் உள்ளமும்; காணின், வேம் நயனமும்.
படியின்மேல் வெம்மையைப் பகரினும், பகரும் நா
முடிய வேம்; முடிய மூடு இருளும் வான் முகடும் வேம்;
விடியுமேல், வெயிலும் வேம்; மழையும் வேம்; மின்னினோடு
இடியும் வேம்; என்னில், வேறு யாவை வேவாதவே?
விஞ்சு வான் மழையின்மேல் அம்பும் வேலும் பட,
செஞ்செவே செருமுகத்து அன்றியே, திறன் இலா
வஞ்சர் தீவினைகளால் மான மா மணி இழந்து
அஞ்சினார் நெஞ்சுபோல், என்றும் ஆறாது அரோ.
பேய் பிளந்து ஒக்க நின்று உலர் பெருங் கள்ளியின்
தாய் பிளந்து உக்க கார் அகில்களும், தழை இலா
வேய் பிளந்து உக்க வெண் தரளமும், விட அரா
வாய் பிளந்து உக்க செம் மணியுமே-வனம் எலாம்.
பாரும் ஓடாது; நீடாது எனும் பாலதே:
சூரும் ஓடாது; கூடாதுஅரோ: சூரியன்
தேரும் ஓடாது, மா மாகம் மீ; தேரின், நேர்
காரும் ஓடாது; நீள் காலும் ஓடாது அரோ.
கண் கிழித்து உமிழ் விடக் கனல் அரா-அரசு கார்
விண் கிழித்து ஒளிரும் மின் அனைய பல் மணி, வெயில்
மண் கிழித்திட எழும் சுடர்கள், மண்மகள் உடல்
புண் கிழித்திட எழும் குருதியே போலுமே.
புழுங்கு வெம் பசியொடு புரளும் பேர் அரா
விழுங்க வந்து எழுந்து எதிர் விரித்த வாயின்வாய்,
முழங்கு திண் கரி புகும் முடுகி-மீமிசை
வழங்கு வெங் கதிர் சுட, மறைவு தேடியே!
ஏக வெங் கனல் அரசிருந்த, காட்டினில்
காகமும் கரிகளும் கரிந்து சாம்பின;-
மாக வெங் கனல் எனும் வடவைத் தீச் சுட,
மேகமும் கரிந்து இடை வீழ்ந்த போலுமே.
கானகத்து இயங்கிய கழுதின் தேர்க் குலம்,
தான் அகத்து எழுதலால் தலைக் கொண்டு ஓடிப்போய்,
மேல் நிமிர்ந்து எழுந்திடில் விசும்பும் வேம் எனா,
வானவர்க்கு இரங்கி, நீர் வளைந்தது ஒத்ததே!
ஏய்ந்த அக் கனலிடை எழுந்த கானல்-தேர்,
காய்ந்த அக் கடு வனம் காக்கும் வேனிலின்
வேந்தனுக்கு அரசு வீற்றிருக்கச் செய்தது ஓர்
பாய்ந்த பொன் காலுடைப் பளிக்குப் பீடமே!
தா வரும் இரு வினை செற்று, தள்ள அரும்
மூவகைப் பகை அரண் கடந்து, முத்தியில்
போவது புரிபவர் மனமும், பொன் விலைப்
பாவையர் மனமும், போல் பசையும் அற்றதே!
பொரி பரல் படர் நிலம் பொடிந்து கீழ் உற
விரிதலின், பெரு வழி விளங்கித் தோன்றலால்,
அரி மணிப் பணத்து அரா-அரசன் நாட்டினும்
எரி கதிர்க்கு இனிது புக்கு இயங்கல் ஆயதே!
வெம்மையை தாங்கும் ஆற்றல் பெற இராம இலக்குவருக்கு இரண்டு மந்திரங்களை முனிவன் உபதேசித்தல்
எரிந்து எழு கொடுஞ் சுரம் இனையது எய்தலும்,
அருந் தவன், இவர், பெரிது அளவு இல் ஆற்றலைப்
பொருந்தினர் ஆயினும், பூவின் மெல்லியர்;
வருந்துவர் சிறிது என மனத்தின் நோக்கினான்.
நோக்கினன் அவர் முகம்; நோக்க, நோக்குடைக்
கோக் குமரரும் அடி குறுக, நான்முகன்
ஆக்கின விஞ்சைகள் இரண்டும் அவ் வழி
ஊக்கினன்; அவை அவர் உள்ளத்து உள்ளினார்.
உள்ளிய காலையின் ஊழித் தீயையும்
எள்ளுறு கொழுங் கனல் எரியும் வெஞ்சுரம்,
தெள்ளு தண் புனலிடைச் சேறல் ஒத்தது;
வள்ளலும், முனிவனை வணங்கிக் கூறுவான்:
அந்த நிலம் அழிந்த காரணத்தை முனிவனிடம் இராமன் வினாவுதல்
சுழி படு கங்கை அம் தொங்கல் மோலியான்
விழி பட வெந்ததோ? வேறுதான் உண்டோ ?
பழி படர் மன்னவன் பரித்த நாட்டினூங்கு
அழிவது என்? காரணம், அறிஞ! கூறு என்றான்.
விசுவாமித்திரன் தாடகையின் வரலாறு கூறுதல்
என்றலும், இராமனை நோக்கி, இன் உயிர்
கொன்று உழல் வாழ்க்கையள், கூற்றின் தோற்றத்தள்,
அன்றியும் ஐ-இருநூறு மையல் மா
ஒன்றிய வலியினள், உறுதி கேள் எனா,
கல் நவில் தோளினாய்! கமலத் தோன் அருள்
மன்னுயிர் அனைத்தையும் வாரி வாய் மடுத்து,
இன் உயிர் வளர்க்கும் ஓர் எரி கொள் கூற்றமே
அன்னவள் யாவள் என்று அறையக் கேட்டியால்:
இயக்கர்தம் குலத்துளான், உலகம் எங்கணும்
வியக்குறும் மொய்ம்பினான், எரியின் வெம்மையான்,
மயக்கு இல் சற்சரன், எனும் வலத்தினான், அருள்
துயக்கு இலன் சுகேது என்று உளன் ஒர் தூய்மையான்.
அன்னவன் மகவு இலாது அயரும் சிந்தையான்,
மன் நெடுந் தாமரை மலரின் வைகுறும்
நல் நெடு முதல்வனை வழுத்தி, நல் தவம்
பல் நெடும் பகல் எலாம் பயின்ற பான்மையான்.
முந்தினன் அரு மறைக் கிழவன், "முற்றும் நின்
சிந்தனை என்?" என,"சிறுவர் இன்மையால்
நொந்தனென்; அருள்க" என, "நுணங்கு கேள்வியாய்!
மைந்தர்கள் இலை; ஒரு மகள் உண்டாம்" என்றான்.
"பூ மட மயிலினைப் பொருவும் பொற்பொடும்,
ஏமுறு மதமலை ஈர்-ஐஞ்ஞூறுடைத்
தாம் மிகு வலியொடும், தனயை தோன்றும்; நீ
போ" என, மலர் அயன் புகன்று போயினான்.
ஆயவன் அருள்வழி, அலர்ந்த தாமரைச்
சேயவள் என வளர் செவ்வி கண்டு, "இவட்கு
ஆயவன் யார்கொல்?" என்று ஆய்ந்து, தன் கிளை
நாயகன், சுந்தன் என்பவற்கு நல்கினான்.
"காமனும் இரதியும் கலந்த காட்சி ஈது
ஆம்" என, இயக்கனும் அணங்கு அனாளும், வேறு
யாமமும் பகலும் ஓர் ஈறு இன்று என்னலாய்,
தாம் உறு பெருங் களிச் சலதி மூழ்கினார்.
பற்பல நாள் செலீஇ, பதுமை போலிய
பொற்பினாள் வயிற்றிடை, புவனம் ஏங்கிட,
வெற்பு அன புயத்து மாரீசனும், விறல்
மல் பொரு சுவாகுவும், வந்து தோன்றினார்.
மாயமும், வஞ்சமும், வரம்பும் இல் ஆற்றலும்,
தாயினும் பழகினார் தமக்கும் தேர்வு ஓணாது,
ஆயவர் வளர்வுழி, அவரை ஈன்ற அக்
காய் சினத்து இயக்கனும், களிப்பின் மேன்மையான்.
தீது உறும் அவுணர்கள் தீமை தீர்தர,
மோதுறு கடல் எலாம் ஒரு கை மொண்டிடு
மாதவன் உறைவிடம் அதனின் வந்து, நீள்
பாதவம் அனைத்தையும் பறித்து வீசினான்
விழைவு அறு மா தவம் வெஃகினோர் விரும்பு
உழை, கலை, இரலையை உயிர் உண்டு, ஓங்கிய
வழை முதல் மரன் எலாம் மடிப்ப, மா தவன்
தழல் எழ விழித்தனன்; சாம்பல் ஆயினான்.
மற்றவன் விளிந்தமை மைந்தர் தம்மொடும்
பொற்றொடி கேட்டு, வெங் கனலின் பொங்குறா,
முற்றுற முடிக்குவென் முனியை என்று எழா,
நற்றவன் உறைவிடம் அதனை நண்ணினாள்.
இடியொடு மடங்கலும் வளியும் ஏங்கிட,
கடி கெட அமரர்கள், கதிரும் உட்கிட,
தடியுடை முகில் குலம் சலிப்ப, அண்டமும்
வெடிபட, அதிர்ந்து, எதிர் விளித்து மண்டவே.
தமிழ் எனும் அளப்ப அருஞ் சலதி தந்தவன்
உமிழ் கனல் விழி வழி ஒழுக, உங்கரித்து
"அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே
இழிக!" என, உரைத்தனன், அசனி எஞ்சவே.
வெருக்கொள, உலகையும் விண்ணுளோரையும்
முருக்கி, எவ் உயிரும் உண்டு, உழலும் மூர்க்கராம்
அரக்கர்கள் ஆயினர், அக் கணத்தினில்
உருக்கிய செம்பென உமிழ் கண் தீயினர்.
ஆங்கு அவன், வெகுளியும், அறைந்த சாபமும்
தாங்கினர்; எதிர் செயும் தருக்கு இலாமையின்,
நீங்கினர்; சுமாலியை நேர்ந்து, "நின்கு யாம்
ஓங்கிய புதல்வர்" என்று, உறவு கூர்ந்தனர்.
அவனொடும் பாதலத்து அநேக நாள் செலீஇ,
தவன் உறு தசமுகன் தனக்கு மாதுலர்
இவர் என, புடைத்து அழித்து, உலகம் எங்கணும்,
பவனனின் திரிகுநர், பதகி மைந்தர்கள்.
மிகும் திறல் மைந்தரை வேறு நீங்குறா,
தகும் தொழில் முனிவரன் சலத்தை உன்னியே,-
வகுந்துவின் வசுவரி வதிந்தது இவ் வனம்
புகுந்தனள்,-அழல் எனப் புழுங்கும் நெஞ்சினாள்.
மண் உருத்து எடுப்பினும், கடலை வாரினும்,
விண் உருத்து இடிப்பினும், வேண்டின், செய்கிற்பாள்;
எண் உருத் தெரிவு அரும் பாவம் ஈண்டி, ஓர்
பெண் உருக் கொண்டெனத் திரியும் பெற்றியாள்;
பெரு வரை இரண்டொடும், பிறந்த நஞ்சொடும்,
உரும் உறழ் முழக்கொடும், ஊழித் தீயொடும்,
இரு பிறை செறிந்து எழும் கடல் உண்டாம் எனின்,
வெருவரு தோற்றத்தள் மேனி மானுமே;
சூடக அரவு உறழ் சூலக் கையினள்;
காடு உறை வாழ்க்கையள்;-கண்ணின் காண்பரேல்,
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்!-
"தாடகை" என்பது அச் சழக்கி நாமமே;
உளப் பரும் பிணிப்பு அறா உலோபம் ஒன்றுமே
அளப்ப அருங் குணங்களை அழிக்குமாறுபோல்,
கிளப்ப அருங் கொடுமைய அரக்கி கேடு இலா
வளப் பரு மருத வைப்பு அழித்து மாற்றினாள்;
இலங்கை அரசன் பணி அமைந்து, ஒர் இடையூறா,
விலங்கள் வலிகொண்டு, எனது வேள்வி நலிகின்றாள்;-
அலங்கல் முகிலே!-அவள் இ(வ்) அங்க நிலம் எங்கும்
குலங்களொடு அடங்க நனி கொன்று திரிகின்றாள்;
முன் உலகு அளித்து முறை நின்ற உயிர் எல்லாம்
தன் உணவு எனக் கருது தன்மையினள்;-மைந்த!-
என் இனி உணர்த்துவது? இனிச் சிறிது நாளில்
மன்னுயிர் அனைத்தையும் வயிற்றின் இடும் என்றான்.
தாடகையின் உறைவிடத்தை இராமன் வினாவுதல்
அங்கு, உறுவன் அப் பரிசு உரைப்ப, அது கேளா,
கொங்கு உறை நறைக் குல மலர்க் குழல் துளக்கா,
எங்கு உறைவது, இத் தொழில் இயற்றுபவள்? என்றான் -
சங்கு உறை கரத்து ஒரு தனிச் சிலை தரித்தான்.
தாடகை உறையும் மலையை முனிவன் காட்ட, தாடகை அங்குத் தோன்றுதல்
கைவரை எனத் தகைய காளை உரை கேளா,
ஐவரை அகத்திடை அடைத்த முனி, ஐய!
இவ் வரை இருப்பது அவள் என்பதனின் முன்பு, ஓர்
மை வரை நெருப்பு எரிய வந்ததென, வந்தாள்.
தாடகையின் தோற்றம்
சிலம்புகள் சிலம்பிடை செறித்த கழலோடும்
நிலம் புக மிதித்தனள்; நெளித்த குழி வேலைச்
சலம் புக, அனல் தறுகண் அந்தகனும் அஞ்சிப்
பிலம் புக, நிலக் கிரிகள் பின் தொடர, வந்தாள்
இறைக்கடை துடித்த புருவத்தள், எயிறு என்னும்
பிறைக் கடை பிறக்கிட மடித்த பில வாயள்,
மறைக் கடை அரக்கி, வடவைக் கனல் இரண்டு ஆய்
நிறைக் கடல் முளைத்தென, நெருப்பு எழ விழித்தாள்.
கடம் கலுழ் தடங் களிறு கையொடு கை தெற்றா,
வடம் கொள, நுடங்கும் இடையாள், மறுகி வானோர்
இடங்களும், நெடுந் திசையும், ஏழ் உலகும், யாவும்,
அடங்கலும் நடுங்க, உரும் அஞ்ச, நனி ஆர்த்தாள்.
தாடகை ஆரவாரத்துடன் அவர்களை நோக்கி நகைத்து, வீர உரை பகர்தல்
ஆர்த்து, அவரை நோக்கி நகைசெய்து, எவரும் அஞ்ச,
கூர்த்த நுதி முத் தலை அயில் கொடிய கூற்றைப்
பார்த்து, எயிறு தின்று, பகு வாய்முழை திறந்து, ஓர்
வார்த்தை உரைசெய்தனள்-இடிக்கும் மழை அன்னாள்-
கடக்க அரும் வலத்து எனது காவல் இது; யாவும்
கெட, கருவறுத்தனென்; இனி, "சுவை கிடக்கும்
விடக்கு அரிது" எனக் கருதியோ? விதிகொடு உந்த,
படக் கருதியோ?-பகர்மின், வந்த பரிசு! என்றே.
வேல் கொண்டு எறிவேன்? எனத் தாடகை சினந்து வருதல்
மேகம் அவை இற்று உக விழிந்தனள், புழுங்கா,
மாக வரை இற்று உக உதைத்தனள்; மதித் திண்
பாகம் எனும் முற்று எயிறு அதுக்கி, அயில் பற்றா,
ஆகம் உற உய்த்து, எறிவென் என்று, எதிர் அழன்றாள்.
பெண் என்றெண்ணி இராமன் கணை தொடாதிருத்தல்
அண்ணல் முனிவற்கு அது கருத்து எனினும், ஆவி
உண் என, வடிக் கணை தொடுக்கிலன்; உயிர்க்கே
துண்ணெனும் வினைத்தொழில் தொடங்கியுளளேனும்,
பெண் என மனத்திடை பெருந்தகை நினைந்தான்.
இராமன் கருத்தறிந்த முனிவன், இவள் பெண் அல்லள்; கொல்லுதி எனல்
வெறிந்த செம் மயிர் வெள் எயிற்றாள், தனை
எறிந்து கொல்வென் என்று ஏற்கவும், பார்க்கிலாச்
செறிந்த தாரவன் சிந்தைக் கருத்து எலாம்
அறிந்து, நான்மறை அந்தணன் கூறுவான்:
தீது என்றுள்ளவை யாவையும் செய்து, எமைக்
கோது என்று உண்டிலள்; இத்தனையே குறை;
யாது என்று எண்ணுவது? இக் கொடியாளையும்,
மாது என்று எண்ணுவதோ?-மணிப் பூணினாய்!
நாண்மையே உடையார்ப் பிழைத்தால், நகை;
வாண்மையே பெற்ற வன் திறல் ஆடவர்
தோண்மையே இவள் பேர் சொலத் தோற்குமேல்,
ஆண்மை என்னும் அது ஆரிடை வைகுமே?
இந்திரன் இடைந்தான்; உடைந்து ஓடினார்,
தந்திரம் படத் தானவர், வானவர்;
மந்தரம் இவள் தோள் எனின், மைந்தரோடு,
அந்தரம் இனி யாதுகொல், ஆண்மையே?
மன்னர் மன்னவன் காதல! மற்றும் ஒன்று
இன்னம் யான் உரைக்கின்றது யாது எனின்,
முன் ஓர் காலம் நிகழ்ந்த முறைமை ஈது
என்ன ஓதலுற்றான் தவத்து ஈறு இலான்.
பிருகு என்னும் பெருந் தவன் தன் மனை
வரு கயல் கண் கியாதி, வல் ஆசுரர்க்கு
உருகு காதலுற, உறவாதலே
கருதி, ஆவி கவர்ந்தனன், நேமியான்.
"வானகத்தினில், மண்ணினில், மன்னுயிர்
போனகம் தனக்கு" என்று எணும் புந்திய
தானவன் குமுதிப் பெயராள்தனை
ஊன் ஒழித்தனன் வச்சிரத்து உம்பர்கோன்,
ஆதலால், அரிக்கு, ஆகண்டலன் தனக்கு,
ஓது கீர்த்தி உண்டாயது அல்லால், இடை
ஏதம் என்பன எய்தியவோ? சொலாய்-
தாது அடர்ந்து தயங்கிய தாரினாய்!
கறங்கு அடல் திகிரிப் படி காத்தவர்
பிறங்கடைப் பெரியோய்! பெரியோரொடும்
மறம்கொடு, இத் தரை மன்னுயிர் மாய்த்து, நின்று,
அறம் கெடுத்தவட்கு ஆண்மையும் வேண்டுமோ?
சாற்றும் நாள் அற்றது எண்ணி, தருமம் பார்த்து,
ஏற்றும் விண் என்பது அன்றி, இவளைப் போல்,
நாற்றம் கேட்டலும் தின்ன நயப்பது ஓர்
கூற்றும் உண்டுகொல்?-கூற்று உறழ் வேலினாய்!
மன்னும் பல் உயிர் வாரி, தன் வாய்ப் பெய்து
தின்னும் புன்மையின் தீமையது ஏது? -ஐய!-
"பின்னும் தாழ் குழல் பேதைமைப் பெண் இவள்
என்னும் தன்மை, எளிமையின் பாலதே!
ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன்; இவட்
சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன்;
ஆறி நின்றது அருள் அன்று; அரக்கியைக்
கோறி என்று, எதிர் அந்தணன் கூறினான்.
முனிவனின் ஏவலுக்கு இராமன் இசைந்து கூறுதல்
ஐயன் அங்கு அது கேட்டு, அறன் அல்லவும்
எய்தினால், "அது செய்க!" என்று ஏவினால்,
மெய்ய! நின் உரை வேதம் எனக் கொடு
செய்கை அன்றோ! அறம் செயும் ஆறு என்றான்.
தாடகை சூலப் படையை ஏவ, இராமன் அம்பால் அதனைத் துணித்தல்
கங்கைத் தீம் புனல் நாடன் கருத்தை, அம்
மங்கைத் தீ அனையாளும் மனக்கொளா,
செங் கைச் சூல வெந் தீயினை, தீய தன்
வெங் கண் தீயொடு மேற்செல வீசினாள்.
புதிய கூற்று அனையாள் புகைந்து ஏவிய
கதிர் கொள் மூஇலைக் கால வெந் தீ, முனி
விதியை மேற்கொண்டு நின்றவன்மேல், உவா
மதியின்மேல் வரும் கோள் என, வந்ததே.
மாலும், அக் கணம் வாளியைத் தொட்டதும்,
கோல வில் கால் குனித்ததும், கண்டிலர்;
காலனைப் பறித்து அக் கடியாள் விட்ட
சூலம் அற்று வீழ் துண்டங்கள் கண்டனர்.
தாடகை கல் மழை பொழிய, இராமன் அம்பு மழையால் தடுத்தல்
அல்லின் மாரி அனைய நிறத்தவள்,
சொல்லும் மாத்திரையின், கடல் தூர்ப்பது ஓர்
கல்லின் மாரியைக் கைவகுத்தாள்; அது
வில்லின் மாரியின், வீரன் விலக்கினான்.
ஏக்கமோடும் இமையவர் எங்கணும்,
வாக்கின் முந்துற மாயை வளர்ப்பவள்,
மூக்கும் வார் செவியும் முறை போயிட,
தாக்கும் வள்ளற்கு இளவலும் தாக்கினான்.
விலக்கி நின்று, அவன் வெங் கணை விரைவினில் விலக்கி,
கலக்கம் வானவர் தவிர்ந்திட, காலனும் கலங்கத்
துலக்கி, வையகத்து இடுக்கணும் முனிவர்தம் துயரும்
உலக்க, ஊழித் தீ ஒப்பது ஓர் கணை தொடுத்து எய்தான்.
இராம பாணம் தாடகையின் நெஞ்சில் ஊடுருவ, அவள் மாய்ந்து மண்ணில் வீழ்தல்
சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது, அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என, போயிற்று அன்றே!
பொன் நெடுங் குன்றம் அன்னான், புகர் முகப் பகழி என்னும்
மன் நெடுங் கால வன் காற்று அடித்தலும், -இடித்து, வானில்
கல் நெடு மாரி பெய்யக் கடையுகத்து எழுந்த மேகம்,
மின்னொடும் அசனியோடும் வீழ்வதே போல-வீழ்ந்தாள்.
பொடியுடைக் கானம் எங்கும் குருதிநீர் பொங்க வீழ்ந்த
தடியுடை எயிற்றுப் பேழ் வாய்த் தாடகை, தலைகள்தோறும்
முடியுடை அரக்கற்கு, அந் நாள், முந்தி உற்பாதம் ஆக,
படியிடை அற்று வீழ்ந்த வெற்றி அம் பதாகை ஒத்தாள்.
கான் திரிந்து ஆழி ஆகத் தாடகை கடின மார்பத்து
ஊன்றிய பகழி வாயூடு ஒழிகிய குருதி வெள்ளம்
ஆன்ற அக் கானம் எல்லாம் பரந்ததால்-அந்தி மாலைத்
தோன்றிய செக்கர் வானம் தொடக்கு அற்று வீழ்ந்தது ஒத்தே!
வாச நாள் மலரோன் அன்ன மா முனி பணி மறாத,
காசு உலாம் கனகப் பைம் பூண், காகுத்தன் கன்னிப் போரில்,
கூசி, வாள் அரக்கர்தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி,
ஆசையால் உழலும் கூற்றும், சுவை சிறிது அறிந்தது அன்றே.
தேவர்கள் மகிழ்ந்து வாழ்த்துதல்
யாமும் எம் இருக்கை பெற்றேம்; உனக்கு இடையூறும் இல்லை;
கோமகற்கு இனி நீ தெய்வப் படைக்கலம் கொடுத்தி என்னா,
மா முனிக்கு உரைத்து, பின்னர், வில் கொண்ட மழை அனான்மேல்
பூமழை பொழிந்து வாழ்த்தி, விண்ணவர் போயினாரே.