
வலிந்த புன்னகை

ரயில் பயணங்களில் அதிகமான ஆலமரங்களை காணமுடியும். ஒரு காலத்தில் என் பால்யத்தை ஞாபகப்படுத்தின அந்த மரங்கள். ஊஞ்சலாக ஆடிய அதன் விழுதுகள் பின்னர் ஜடா முடியாகிவிட்டன. ஜெயகாந்தனின் விழுதுகள் என்ற குருநாவல் ஆலமரங்களை எனக்கு ஓங்கூர் சாமிகளாக மாற்றிவிட்டன.
இன்றைய பயணத்தில் ஜெயகாந்தனின் சிறுகதைகள் குறித்து விவாதிக்கலாம் என முடிவெடுத்தேன். பெரும்பாலான ஞாயிற்றுக் கிழமைகளில் எங்களின் பொழுதுபோக்கு ரயிலில் பயணம் செய்வதுதான். திருச்சியில் இருந்து கும்பகோணம், மயிலாடுதுறை, நாகூர் போகும் ஏதாவது ஒரு பாசஞ்சர் ரயிலில் கூட்டமில்லா பெட்டியாய் பார்த்து ஏறி நினைக்கும் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கு நிழலில் யாருமற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் சிமெண்ட் பெஞ்சுகளில், ஆலமரங்களின் அடியில் அமர்ந்து அரசியல், சினிமா, சமூகம், கலை இலக்கியம் சார்ந்த விஷயங்களை பரிமாறிவிட்டு திரும்பி வரும் ஒரு ரயிலில் மாலை அல்லது முன்னிரவு மீள திருச்சி வந்தடைவோம். மதிய உணவு என்பது எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. பழங்கள், பிஸ்கெட், வெரைட்டி ரைஸ், பரோட்டா இப்படி ஏதாவது கிடைத்ததை உண்பது வழக்கமாகிப்போனது. மெதுவாக நகரும் பயணிகள் ரயில் எங்களின் காலத்தை வேகமாக கடத்தியது. அது எங்களுக்கு இஷ்டமாகிப் போனது.
அன்று நாகூர் வரை டிக்கெட் எடுத்துக் கொண்டு ஏறி அமர்ந்தோம். ஜெயகாந்தனின் ‘அந்தரங்கம் புனிதமானது’ என்ற சிறுகதையை பற்றி நண்பர் சாமி என்கிற சாமித்துரை பேசிக்கொண்டு வந்தார். கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளில் ஏழெட்டு தடவை படித்து விட்டதாகவும் பாத்திரங்கள் எல்லை மீறிப்போகும் கதையென்றும் புதிய புதிய விழுதுகள் தரையில் இறங்கி கிளைகள் நீண்டு பூமியை மறைக்கும் அளவுக்கு அந்த ஆல மரம் வளர்வதாகவும் சொன்னார். நாகை ரயில் நிலையம் வந்தது.
“இங்கே இறங்கிடுவோமா சார்?” என்றேன்.
“சரி” என்றார் சாமி.
ஆசுவாசமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க ஏற்ற அங்கு இல்லையென இறங்கியதும்தான் தெரியவந்தது. மேய்ந்த கண்களுக்குள் தண்டவாளங்களைத் தாண்டி மறுபுறம் ஒர் ஆல மரமும் அடியில் ஓடுகள் வேயப்பட்ட கட்டடத்துடன் ஒரு கோவில் தட்டுப்பட்டது. பக்கத்தில் இருந்த கடைக்குப்போய் மதிய உணவுக்கான பிஸ்கெட்கள் மற்றும் இரண்டு பாட்டில் தண்ணீர் வாங்கிக்கொண்டோம். தண்ணீர் என்றால் குடிநீரை இங்கே குறிக்கும். ரயில் பாதையை கடந்து அந்த ஆல மரத்தடிக்குப் போனோம். கடப்பா கற்களுடனான சற்று நீளமான ஆறு இருக்கைகளும் காலியாக இருந்தன. கோவில் பூட்டிக் கிடந்தது. முனியப்பசாமிக் கொவில் என்பதை தெரிந்து கொண்டோம்.
இருவரும் கடப்பா கல் பெஞ்சில் அமர்ந்தோம்.
“எதைப்பற்றி பேசலாம்” என்றேன்.
“உங்களைப் பற்றி பேசலாமென இருக்கிறேன்” என்றார்.
“என்னைப் பற்றிதான் உங்களுக்கு எல்லாம் தெரியுமே. என்ன பேசுறதுக்கு இருக்கு?”
“உங்களோட எதிர்காலம் பற்றி”
“டூமாரோ வில் நாட் கம் சார்” என்றேன்.
“அந்த தத்துவம் எல்லாம் இப்ப வேண்டாம். நான் உங்களுக்கு ஒரு பெண்ணு பாத்திருக்கேன். டிஸ்ட்ரப் பண்ணாம கேளுங்க. அப்பறம் உங்க கருத்தை சொல்லலாம்”
“சரி சொல்லுங்க. டயம் வேஸ்ட் ஆவுது அதான் சொன்னேன்”
“எங்க ஸ்கூல வேலை பாத்த ஒருத்தர் டூ இயர்ஸ் பேக் இறந்துட்டார். அவரோட மனைவிய நீங்க வாழ்க்கை துணையா ஏத்துகிட்டா என்ன? அவங்க இப்ப அவங்க அம்மா வீட்டுல இருக்காங்க. வேற யாரும் அவங்களுக்கு இல்ல. ஒரு விதவைக்கு வாழ்க்கை கொடுத்ததா எடுத்துக்கிட்டாலும் சரி. இப்ப சொல்ல வேண்டாம். யோசிச்சி மெதுவா சொல்லுங்க” என்றார்.
“நான்தான் மேரேஜ் பண்ணிக்கவே போறதில்லங்குற முடிவுல இருக்கேனே. அப்புறம் எதுக்கு இதெல்லாம்?”
“எல்லாம் மறு பரிசீலனை உட்பட்டதுதான். கல்யாணமே வேண்டாங்குறத்துக்கு பல காரணங்கள் இருக்கலாம். பண்ணி கிடலாங்குறதுக்கு ஒரு காரணமே போதும்”
என்ன பேசுவதென்றே தெரியாமல் விக்கித்து இருந்தேன். அவரே தொடர்ந்தார்.
“ஏன் நீங்க அந்த பொண்ணுக்கு வாழ்வு கொடுக்கக்கூடாதான்னு என்னை கேக்கத் தோணும். என் மனைவியோட நினைவுலயே வாழ்ந்து முடிச்சிடலாம்ன்னு இருக்கேன். மறுபரிசீலனை செய்யக்கூடாதான்னு கேட்டாலும் இந்த பெண்ணுக்கும் எனக்கும் நெறைய வயது வித்தியாசம் கூட” என்று நான் பரிசீலனை செய்வதற்கு உகந்தது என நியாயம் கற்பித்தார்.
விவாதம் நீண்டுகொண்டே போனது. வீடு திரும்பியபோது வழக்கமான கலகலப்பு இல்லை. ஏற்கனவே திட்டமிட்ட படியான இலக்கியம் குறித்த விவாதம் இல்லை. ஏதோ ஒரு புதிய தீவுக்கு கட்டுமரம் கொண்டு பயணிப்பது போல பட்டது எனக்கு.
நான் திருமணமே வேண்டாம் என்ற முடிவுக்கு வத்ததன் காரணத்தை சுருக்கமாக வேணும் சொல்லியே ஆகவேண்டும். யாரும் பெண்கொடுக்க முன்வரவில்லை. அல்லது எனக்கு ஏற்ற பெண்ணாக நான் பார்க்கவில்லை. எப்படியேனும் வைத்துக்கொள்ளலாம்.
ஆரம்பத்தில் முதன் முதலாக ஒரு பெண் பற்றிய பேச்சு வார்த்தைகள் ராணுவ ரகசியம் போலத்தான் நடைபெற்றது. முதலில் நாங்கள் பெண் வீட்டிற்குச் சொன்று இரு தரப்புக்கும் பிடித்துப்போக எங்கள் வீட்டிற்கு நடைமுறை ரீதியில் அடுத்த புதன் கிழமை வருவதாக பேசி முடித்தார்கள்.
அதற்கிடையில் என்னைப் பற்றி உள்ளூர் வார்டு முன்னாள் கவுன்சிலரிடம் பெண் வீட்டார் விசாரித்திருக்கிறார்கள்.
‘அவனுக்கா ஒங்க பொண்ண கொடுக்குறிங்க. அதுக்கு ஒங்க பொண்ண ஓடுற ஆத்துல வெட்டி விடலாமே’ என்றனாம் அவன். நான் ரௌடியாம்.
ரவுடி குருப் ஒன்று ஊரில் இருந்தது உண்மைதான். அதில் நான் உறுப்பினர் இல்லை. நான் அதில் இருந்த உறுப்பினர்களின் நண்பன். ஆனால் நான்தான் அந்த குழுவுக்கு மாஸ்டர் மையின்ட் என சிலர் சொல்லி வந்ததை காற்று வாக்கில் நானே கேட்டிருக்கிறேன். அந்த குழுவின் எதிர்வினையால்தான் அந்த முறை தேர்தலில் அவன் தோற்றுப் போனான் என்பது உண்மை. அதற்கு என்னை பழிவாங்கிவிட்டான்.
அடுத்த ஒரு பெண்ணை எனது நண்பர் முயற்சியில் பெண் வீட்டாருடன் பேசி நானும் அவரும் பெண் வீட்டிற்குப் போனோம். மெதுவடையும் காப்பியும் கொடுத்தார்கள். பெண்ணை காட்டினார்கள். என் அழகிற்கும் அவள் அழகிற்கும் நல்ல பொருத்தம். ஆனால் இருவருக்கும் ஏழு வயது வித்தியாசம் உள்ளது, எனது தம்பிக்கு வேண்டுமானால் தர சம்மதம் என மறுநாள் நண்பனிடம் சொல்லி ஊத்தி மூடிவிட்டார்கள். வயதை முன்னரே கேட்டு இருந்திருக்கலாம். அவருக்கு மெது வடையும் காப்பியும்தான் நஷ்டம். வாடகை கார் எடுத்துப் போனதில் எனக்கு செலவு இரண்டாயிரம் ரூபாய்.
மேலும், இரண்டு பெண்களில் ஒன்று குண்டாக இருந்ததால் எனக்கு ஒத்து வராது என்றார்கள். மற்றோன்று நிரந்தர அரசு வேலை. நான் அப்போது தற்காலிக வேலை செய்தேன் என்று தர இயலாது என்றார்கள். நான்கு இன்னிங்ஸிலும் டக் அவுட்.
அத்தோடு பெண் பார்க்கும் வெட்டி வேலையை நிறுத்திக்கொண்டேன். எனக்காக யாரும் பெண்பார்க்க வேண்டாம் என வீட்டாருக்கு முசுட்டுத்தனமாக கட்டளையிட்டேன். தற்காலிக வேலையும் காலியாக மெட்ராஸ் நோக்கிப் போனேன். அப்போது சென்னை என்பது மெட்ராஸ். வேலை தேடி மட்டும் போகவில்லை. கல்யாணமே வேண்டாம் என்ற வெறுத்த மனதோடு மதுரையின் அருகில் உள்ள எனது குக்கிராமத்தில் இருந்து வேறோடும் தூரோடும் பிடுங்கிக் கொண்டு கிளம்பினேன். என் அவமானம் வருத்தம் எனக்குத்தான் தெரியுதும். அது என்னோடு இருக்கட்டும். எனக்கேற்ற பெண்ணை பார்க்கவில்லை என்பதாலும் என் மீதான வெறுப்பாலும் வீட்டில் உள்ளவர்கள் மீது வெறுப்பை வளர்த்துக்கொண்டு மெல்ல மெல்ல என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன்.