
இறைவனின் விருப்பம்

ஆசிரமம் ஒன்றில் சீடன் ஒருவன் மௌனமாக இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தான். இரவு நேரம் என்பதால் தவளைகளும், பூச்சிகளும் கத்தத் தொடங்கின. அது சீடனுக்குத் தொல்லையாக இருந்தது. வழிபாட்டில் இருந்து எழுந்து இது என்ன சோதனை... இவை எல்லாம் கத்தாமல் இருக்காதா? என குருவிடம் கேட்டான்.
நீ ஏன் அவை கத்துவதாக நினைக்கிறாய்? அவற்றின் மொழியில் அவை இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கலாம் அல்லவா? இறைவனே உயிர்களின் ஓசையை வரும்புவதால்தானே இவற்றை கத்த வைத்திருக்கிறான்... இதைபோய் இடைஞ்சல் என்கிறாயே...? அமைதியாக சொன்னார் குரு.
இதுவல்லவோ உயர்ந்த செயல்
துறவி ஒருவரை விருந்துக்கு அழைத்த இல்லறவாசி ஒருவன், தன் மனைவி உண்பதையும் உறங்குவதையும் தவிர வேறு எதையும் சிறப்பாகச் செய்வதில்லை என்று குறையாகச் சொன்னான்.
அவன் மனைவியை அழைத்த துறவி விவரத்தைக் கேட்டார்.
அய்யா... நான் துன்பத்தையோ துக்கத்தையோ பெரிதாக நினைப்பதில்லை. இருப்பதை விடுத்து இல்லாததற்கு ஆசைப்படுவதில்லை. அதனால் என்னால் நிம்மதியாக உறங்கவும், இருப்பதையே நிறைவாக உண்ணவும் முடிகிறது. இது தவறா?
அவள் சொல்ல, துறவி எதுவும் சொல்லாமலேயே தன் மனைவியின் உயர்வு அவனுக்கு புரிந்தது.